பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. பஸ், ரெயில்நிலையங்களில் அலைமோதும் கூட்டம்
சென்னையில் முக்கிய ரெயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் உள்ளது.;
சென்னை,
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. திருவள்ளுவர் தினம் (15-ந்தேதி), உழவர் திருநாள் (16-ந்தேதி) மற்றும் 17-ந்தேதி (அரசு பொது விடுமுறை), 18-ந்தேதி (சனிக்கிழமை), 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) என 6 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.
சென்னையில் கல்வி, வேலை, தொழில் நிமித்தம் காரணமாக வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குறிப்பாக தென் மாவட்ட மக்கள் அதிகம் பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் பண்டிகையை கொண்டாடுவதற்காக, தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். இதனால், சென்னையில் முக்கிய ரெயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் உள்ளது.
குறிப்பாக, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் செந்தூர், கன்னியாகுமரி, முத்துநகர், பொதிகை, வைகை போன்ற எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. அதேபோல, தாம்பரம் ரெயில் நிலையத்திலும், பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட மிகவும் அதிக அளவில் உள்ளது.
ரெயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள், அரசு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர். தனியார் பஸ்களில் டிக்கெட் கட்டணம் அதிகரித்து இருந்தாலும், உற்றார்-உறவினர்கள், நண்பர்களுடன் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற மனநிலையில் அதிக கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு பயணிகள் தள்ளப்பட்டனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. சிலர், தங்களது சொந்த வாகனங்கள் மூலமாக சென்னையை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால், சென்னையின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் 5 ஆயிரத்து 736 சிறப்பு பஸ்களும், தமிழ்நாடு முழுவதிலும் 44,580 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 2 லட்சம் பேர் அரசு பஸ்களில் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.