ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தே.மு.தி.க. புறக்கணிப்பு

அ.தி.மு.க.வைத் தொடர்ந்து, தே.மு.தி.க.வும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.;

Update:2025-01-11 17:42 IST

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்தார். இதையடுத்து, அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 17-ம் தேதி கடைசி நாளாகும்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என்று தி.மு.க. அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாகவும், இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாது என்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் அ.தி.மு.க.வைத் தொடர்ந்து, தே.மு.தி.க.வும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆடுகளை மத்தையில் அடைத்து வைத்தது போல் மக்களை அடைத்து வைத்து, ஜனநாயக விரோத தேர்தலை தி.மு.க. நடத்தி வெற்றி பெற்றதாக அறிவித்தனர். அதே பாணி இடைத்தேர்தல்தான் மீண்டும் நடக்க போகிறது. எனவே ஜனநாயகத்திற்கு விரோதமாக நடக்கும் இந்த தேர்தலில் நம்பிக்கை இல்லாத காரணத்தால், இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தே.மு.தி.க. புறக்கணிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்