கல்லூரி மாணவிகளுக்கு தொல்லியல் பயிலரங்கம்
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு தொல்லியல் பயிலரங்கம் நடந்தது.
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில், தர்மபுரி தனியார் கல்லூரியில் இளங்கலை 3-ம் ஆண்டு, முதுகலை முதல் மற்றும் 2-ம் ஆண்டும் ஆங்கிலம் பயிலும் 60 மாணவிகளுக்கு தொல்லியல் பயிலரங்கம் நடந்தது. இதில், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், தொல்லியல் என்றால் என்ன? அதன் பிரிவுகள் என்னென்ன, பழங்கால நினைவு சின்னங்கள், கல்வெட்டுகள், பாறை ஓவியங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார். மேலும் நடுகற்களின் காலம், நடுகற்களின் வகைகள், நடுகற்களோடு தொடர்புடைய கல்வெட்டுகள் பற்றியும், சங்க காலம் முதல் தற்போது வரை மாவட்டத்தில் கிடைத்த செங்கற்கள் பற்றியும், அவற்றின் அளவுகள் பற்றியும் கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோட்டைகள் பற்றியும், மயிலாடும்பாறை அகழாய்வில் கிடைத்த பொருட்கள், அங்கு வாழ்ந்த மக்களின் காலத்தின் தொன்மை பற்றியும் எடுத்துக் கூறினார். மாணவிகள் அருங்காட்சியகத்தில் வைத்துள்ள 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல் ஆயுதங்கள், அரிய வகை பொருட்களை பார்வையிட்டனர்.