தேயிலை தோட்ட அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை
சேரம்பாடியில் நிலங்களை வனத்துறையிடம் ஒப்படைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தேயிலை தோட்ட அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பந்தலூர் அருகே சேரம்பாடி, கொளப்பள்ளி, சேரங்கோடு, நெல்லியாளம், பாண்டியார் ஆகிய அரசு தேயிலை தோட்டங்களில் தொழிலாளர்கள், அரசு மூலம் கட்டி கொடுக்கப்பட்ட குடியிருப்புகளில் குடும்பங்களுடன் குடியிருந்து வருகின்றனர். தேயிலை தோட்டங்களில் குறிப்பிட்ட அளவு நிலம் அரசு வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளது.
பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண் 1-ல் ஏராளமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளில் குடும்பங்களுடன் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தேயிலை தோட்டதொழிலாளர்கள் பணியாற்றிய தேயிலை தோட்டங்களையும், குடியிருப்புகளையும் தமிழக அரசு வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளது. இதற்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில் அரசு ஒப்படைக்கப்பட்ட நிலங்களை வனத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு, அந்த நிலங்களில் வனத்துறையினர் பராமரிப்பு பணிகளை செய்தனர். மேலும் நேற்று சேரம்பாடி வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு ஆத்திரமடைந்து சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தேயிலை தோட்டத்தில் பணிகள் பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்த கோட்ட மேலாளர் சிவகுமார், எல்.பி.எப். தொழிற்சங்க துணை பொதுசெயலாளர் மாடசாமி ஆகியோர் உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் காரணமாக அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.