நாமகிரிப்பேட்டை பகுதியில் நலிவடைந்து வரும் அப்பளம் தொழில் இலவச மின்சாரம் வழங்கப்படுமா? தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
ராசிபுரம்:
நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நலிவடைந்து வரும் அப்பளம் தயாரிக்கும் தொழிலை மேம்படுத்த இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அப்பளம் தயாரிப்பு
திருமணம் உள்பட அனைத்து விஷேச நிகழ்ச்சிகளில் பரிமாறப்படும் விருந்தில் அப்பளம் முக்கிய இடம்பெறும். சுவைமிகுந்த அப்பளம் ஒவ்வொரு விதமான மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் ஜவ்வரிசி அப்பளம் மிகவும் சுவைமிகுந்ததாக இருப்பதால் அனைவரும் சாதாரண நாட்களில் கூட எண்ணெயில் பொரித்து சாப்பிடுகின்றனர்.
இந்த வகையான அப்பளம் நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை மற்றும் அரியாக்கவுண்டம்பட்டி பகுதிகளில் தரமானதாக தயாரிக்கப்படுகிறது. இதனால் இங்கு தயாரிக்கப்படும் அப்பளத்தை அனைத்து தரப்பு மக்களும் வாங்கி விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசை தொழிலாக அப்பளத்தை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
ஜவ்வரிசி மாவை கொண்டு அப்பளம் தயாரிக்கப்படுவதால், இதை சாப்பிடுபவர்களுக்கு எந்தவிதமான உடல்நலக்குறைவும் ஏற்படுவதில்லை. இப்பகுதியில் தினசரி 1 டன் அளவுக்கு அப்பளம் தயாரிக்கப்படுகிறது. பொதுவாக விறகு அடுப்பு மூலமே தயாரிக்கின்றனர். அப்பளம் தயாரிக்கும் தொழிலாளிக்கு தினந்தோறும் ரூ.250 முதல் ரூ.300 வரை வருமானம் கிடைக்கிறது. ஆண்டு ஒன்றுக்கு குடிசை தொழில் மூலம் ரூ.3 கோடிக்கு அப்பளம் தயார் செய்யப்படுகிறது.
இலவச மின்சாரம்
இங்கு தயாரிக்கப்படும் அப்பளம் தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரா, கான்பூர், டெல்லி, ஆக்ரா போன்ற மாநில பகுதிகளுக்கும் அட்டை பெட்டிகளில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய 3 மாதங்களில் மட்டுமே தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. மற்ற நாட்களில் தொழிலாளர்கள் கிடைக்கின்ற மற்ற கூலி வேலைகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் குடிசை தொழில் மூலம் தயாரிக்கப்படும் அப்பளத்திற்கு போட்டியாக, தற்போது ஜவ்வரிசி ஆலை வைத்திருப்பவர்கள் உயர்ரக எந்திரங்கள் மூலம் ஜவ்வரிசி அப்பளத்தை தயாரித்து விற்பனை செய்வதால் குடிசை தொழில் செய்வோர் போட்டியை சமாளிக்க முடியாமல் தொழிலில் தடுமாறும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எந்திரங்கள் மூலம் அப்பளம் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு கூலியும் சற்று அதிகமாக கிடைப்பதால் அங்கு சென்று விடுகின்றனர்.
இதனால் குடிசை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சினையும் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொழிலும் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. எனவே மானியத்துடன் கடன் உதவி, இலவச மின்சாரம் போன்ற சலுகைகளை அரசு வழங்க வேண்டும் என அப்பளம் தயாரிப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாழ்வாதாரம் பாதிப்பு
இதுகுறித்து அப்பளம் தயாரிப்பாளரும், நாமகிரிப்பேட்டை மரவள்ளிக்கிழங்கு உப பொருட்கள் சேவை தொழில் கூட்டுறவு சங்க தலைவருமான சங்கர் கூறியதாவது:-
அப்பளம் தயாரிப்பதில் 3 மாதங்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. இதனால் அப்பளம் தயாரிப்போருக்கும், தொழிலாளருக்கும் வருமானம் பாதிக்கிறது. மழைக்காலங்களில் ஜவ்வரிசி மாவு கிடைப்பதில்லை. அந்த காலங்களிலும் ஜவ்வரிசி மாவு தட்டுப்பாடின்றி கிடைக்க செய்ய வேண்டும். தற்போது அரசு விதித்துள்ள மின்கட்டணம் குடிசை தொழில் செய்யும் எங்களை போன்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே எங்கள் தொழிலுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். இல்லையெனில் மின் கட்டண சலுகை வழங்க வேண்டும்.
தற்போது ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் எந்திரங்கள் வைத்து அப்பளம் தயாரிக்கின்றனர். அவர்களது போட்டியை சமாளிக்க முடியாத நிலை உள்ளது. ஏழை தொழிலாளர்கள், அப்பளம் தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
கலர் அப்பளம் தயாரிக்க அனுமதி
எங்களது சங்கத்தில் 120-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்கள் தயாரிக்கும் அப்பளத்தை சங்கத்தின் மூலம் விற்கின்றனர். தற்போது சிலர் வெளியில் விற்கின்றனர். உறுப்பினர்கள் நலன் கருதியும் சங்க வளர்ச்சியை கருத்தில் கொண்டும் சங்கத்தின் மூலமாகவே அப்பளத்தை விற்கவும், மூல பொருளான ஜவ்வரிசி மாவை சங்கத்தின் மூலமாக வாங்கி விற்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களை கவரும் வகையில் பல்வேறு கலரில் அப்பளம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அதிகாரிகள் தடை செய்துள்ளனர். ரசாயனம் எதுவும் கலப்பதில்லை. இயற்கையான முறையில் கலர் அப்பளங்களை தயாரிக்க அரசு உரிய அனுமதி அளிக்க வேண்டும். குடிசை தொழில் மூலம் அப்பளம் தயாரிப்போருக்கு குறைந்த வட்டியில் கூட்டுறவு வங்கிகளிலோ, மற்ற தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ மானியத்துடன் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிவாரண உதவி
பெண் தொழிலாளி காமாட்சி கூறியதாவது:-
ஒரு நாளைக்கு ரூ.250 மட்டுமே கூலி கிடைக்கிறது. அதுவும் 3 மாதங்களுக்கு தான் வேலை கிடைக்கிறது. மழைக்காலங்களில் தொழில் நடைபெறாது. அதனால் எங்களுக்கு அப்பளம் தயாரிக்கும் தொழிலில் வேலை இல்லை. மாற்று வேலைக்குத்தான் சென்று வருகிறோம். வேலையற்று இருப்பதால் வருமானமின்றி குடும்பம் நடத்த முடியாத நிலை உள்ளது.
எனவே வேலை இல்லாத காலங்களில் எங்களுக்கு நிவாரண உதவி வழங்கவும், கடன் உதவி கிடைக்கவும் அரசு உதவி செய்ய வேண்டும். அப்படி செய்தால் ஏழை தொழிலாளர்களாகிய எங்கள் வாழ்வாதாரம் மேம்படும். ஆண்டு முழுவதும் வேலை கிடைக்க குடிசை தொழிலான அப்பளம் தயாரிப்போருக்கு மூலப்பொருள் கிடைக்க செய்ய வேண்டும். பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தை கொண்டு வந்து அமல்படுத்தினால் வேலை இல்லாத நாட்களில் அதில் சேர்ந்து வேலை செய்து வருமானத்தை ஈட்ட முடியும். எனவே அரசு விரைவில் பேரூராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தை கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.