தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி சாவு:சப்-இன்ஸ்பெக்டர் மீது உறவினர்கள் புகார்
தேனி அருகே தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி இறந்த வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது உறவினா்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.
தேனி அருகே கோட்டூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 45). கூலித்தொழிலாளி. கடந்த 6-ந்தேதி இவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அவருடைய மனைவி சின்னப்பொண்ணு மற்றும் உறவினர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பொறுப்பு வகிக்கும் ரவிச்சந்திரனிடம், சின்னப்பொண்ணு ஒரு மனு கொடுத்தார்.
அதில், "எனது கணவர் 20 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தபோது, சீலையம்பட்டியில் முதியவர் ஒருவர் குறுக்கே வந்து விட்டார். அவரும், எனது கணவரும் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், மோட்டார் சைக்கிளை திருப்பிக் கொடுக்காமல் அலைக்கழித்தார். இதனால் எனது கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்தார். என் கணவர் இறப்பதற்கு, சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்த மன அழுத்தம் தான் காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.