அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார். அவரது உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-18 04:37 GMT

மின்சாரம் தாக்கி பலி

பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 34). கூலி தொழிலாளியான இவர், நேற்று காலை அருகில் உள்ள காலி மைதானத்தின் வழியாக நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்தது. இது தெரியாமல் அந்த வழியாக நடந்து சென்ற வசந்தகுமார், கீழே கிடந்த மின்கம்பியை மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட வசந்தகுமார், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

உறவினர்கள் போராட்டம்

இதுபற்றி தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இந்த பகுதியில் அதிக அளவில் கன்டெய்னர் லாரிகள் செல்கின்றன. இதனால் கன்டெய்னரில் சிக்கி அடிக்கடி உயர் அழுத்த மின்கம்பிகள் அறுந்துவிடுவதால் அதனை மின்வாரிய ஊழியர்கள் ஒட்டுப்போட்டு வைத்து உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக மின்வயரில் போடப்பட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டு மின்வயர் கீழே விழுந்து கிடந்துள்ளது. இது தெரியாமல் அதை மிதித்தபோது வசந்தகுமார் பலியானதாக அவர்கள் தெரிவித்தனர்.

எனவே மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து வசந்தகுமார் உடலை எடுக்க விடாமல் அவரது உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த நசரத்பேட்டை போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் வசந்தகுமார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், மேலும் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்