தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு

தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி இறந்தார். விபத்து நடந்ததும் தப்பியஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-06-17 18:45 GMT

தக்கலை:

தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி இறந்தார். விபத்து நடந்ததும் தப்பியஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

தொழிலாளி படுகாயம்

திருவட்டார் அருகே உள்ள வீயன்னூர் பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன் (வயது 49), விளம்பர பலகைகள் செய்யும் தொழிலாளி. இவருடைய மனைவி ஷீஜா ஹெலன் ரோஸ் (43). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சுரேந்திரன், மனைவியின் சகோதரி அகிலாவை மாலையில் தனது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர வைத்து புலிப்பனம் பஸ் நிறுத்தத்திற்கு சென் றார். அங்கு அவரை பஸ்சில் ஏற்றி அனுப்பி விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். இவருக்கு பின்னால் அதிவேகமாக வந்த இன்னொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் கீழே விழுந்த சுரேந்திரனுக்கு பின் தலையில் படுகாயம் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். அப்போது விபத்தை பார்த்த பொதுமக்கள் மோதிய மோட்டார் சைக்கிளில் வந்த இருவரிடமும் படுகாயம் அடைந்தவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல கூறினர். அதைத்தொடர்ந்து அவர்கள் ஒரு ஆட்டோவில் சுரேந்திரனை ஏற்றிக்கொண்டு சென்று மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.

போலீசார் விசாரணை

பின்னர் அவர்கள் அங்கிருந்து விபத்து நடந்த இடத்துக்கு வந்தனர். அங்கிருந்த மோட்டார் சைக்கிளை நைசாக எடுத்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இந்த நிலையில் விபத்து குறித்து அறிந்த சுரேந்திரனின் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து சுரேந்திரனை மேல்சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே சுரேந்திரன் இறந்துவிட்டதாக கூறினார். இந்த விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி விசாரணை நடத்தினார். விபத்து நடந்ததும் மோட்டார் சைக்கிளுடன் தப்பிய ஆசாமியை பிடிக்க அவரின் அடையாளத்தை கண்டறிவதற்காக விபத்து நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்