காட்டுப்பன்றி தாக்கி தொழிலாளி படுகாயம்
தொழிலாளி யை தாக்கிய காட்டுப்பன்றி
தாளவாடியை அடுத்த நேதாஜி சர்க்கிள் பகுதியை சேர்ந்தவர் சின்ராசு (வயது 50). கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய வீடு இருந்த பகுதிக்கு 2 காட்டுப்பன்றிகள் வந்து உள்ளன. பின்னர் அந்த 2 காட்டுப்பன்றிகளும் திடீரென சின்ராசுவை தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்து கீழே விழுந்தார். மேலும் அவர் சத்தம் போட்டு கத்தினார். இதனால் அந்த 2 காட்டுப்பன்றிகளும் அங்கிருந்து வனப்பகுதிக்குள் தப்பி ஓடின. இதை கண்டதும், அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று படுகாயம் அடைந்த சின்ராசுவை மீட்டு தாளவாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சின்ராசு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து தாளவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.