தொழிலாளி வெட்டிக் கொலை
சிதம்பரத்தில் முன்விரோதம் காரணமாக தொழிலாளியை வெட்டி படுகொலை செய்த 2 வாலிபர்கள் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
சிதம்பரம்,
தொழிலாளி
சிதம்பரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நாராயணன் மகன் ராமு என்ற உண்டி ராமு(வயது 35). தொழிலாளியான இவர் நேற்று காலை தில்லை காளியம்மன் கோவில் எதிரே உள்ள சாலையோர டிபன் கடையில் இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் திடீரென தங்களிடம் இருந்த கத்தியால் ராமுவின் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினர். மேலும் உருட்டுக்கட்டையாலும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ராமு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதைப்பார்த்து அங்கே சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களும், அருகே நின்று கொண்டிருந்த பொதுமக்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
முன்விரோதம் காரணமாக...
இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையில் சிதம்பரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தில்லை காளியம்மன் கோவில் தெரு, எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த செல்வம் மகன் சத்யேந்திரன்(21), அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் கணேஷ்(26) ஆகியோர் கொலை செய்தது தெரியவந்தது. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமுவுக்கும், கணேசுக்கும் இடையே நடந்த தகராறில் கணேசை ராமு தாக்கியதாகவும், இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ராமுவை கணேஷ், சத்யேந்திரன் ஆகிய இருவரும் சேர்ந்து வெட்டிக்கொலை செய்ததும் தொியவந்தது.
போலீஸ் நிலையத்தில் சரண்
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து சத்யேந்திரன், கணேஷ் ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வந்தனர்.
இதை அறிந்த அவர்கள் இருவரும் சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து, இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்விரோதம் காரணமாக தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.