கால்வாயில் மூழ்கி தொழிலாளி சாவு
பூதப்பாண்டி அருகே கால்வாயில் மூழ்கி தொழிலாளி சாவு
அழகியபாண்டியபுரம்,
பூதப்பாண்டி அருகே உள்ள ஈசாந்திமங்கலம் மாங்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 55), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால், முருகன் தனியாக வசித்து வந்தார். மேலும், இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஈசாந்திமங்கலம் சந்திப்பு பகுதியில் உள்ள அரசியர் கால்வாயின் பாலத்தில் அமர்ந்து இருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக பாலத்தில் இருந்து தவறி கால்வாய்க்குள் விழுந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று காலையில் அந்த வழியாக சென்றுவர்கள் கால்வாயில் தண்ணீரில் மூழ்கி முருகன் இறந்து கிடப்பதை கண்டு பூதப்பாண்டி போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.