அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியம்(வயது 36). விவசாயக் கூலி தொழிலாளி. இவரது வீட்டில் உள்ள ஒரு மின் விளக்கு எரியவில்லை எனக்கூறப்படுகிறது. இதையடுத்து ஆரோக்கியம் மின் விளக்கை சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் ஆரோக்கியத்தை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபுரந்தான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே ஆரோக்கியம் பரிதாபமாக உயிரிழந்தார். உடனே இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் ஆரோக்கியத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து ஆரோக்கியத்தின் மனைவி அரியதங்கம் கொடுத்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.