கடன் தொல்லையால் மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை
கடன் தொல்லையால் மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கார்குடி காலனி தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 40). கூலி தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. தொடர்ந்து வேலைக்கு செல்லாததால் கடன் சுமை அதிகமானதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மீன் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றவர் தனது மனைவி மகேஸ்வரியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கடன் சுமை காரணமாக தா.பழூர் அருகே உள்ள கீழமைக்கேல்பட்டி பகுதியில் மதுபானத்தில் பூச்சி மருந்து (விஷம்) கலந்து குடித்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஸ்வரி அவரது உறவினர்களோடு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் அங்கிருந்து அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மகேஸ்வரி தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.