ரூ.30 லட்சம் தங்க நகைகளுடன் தொழிலாளி மாயம்

கோவை நகைப் பட்டறையில் இருந்து ரூ.30 லட்சம் தங்க நகை களுடன் வடமாநில தொழிலாளி மாயமானார்.

Update: 2023-01-29 18:45 GMT

கோவை நகைப் பட்டறையில் இருந்து ரூ.30 லட்சம் தங்க நகை களுடன் வடமாநில தொழிலாளி மாயமானார்.

இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

தங்க நகைப்பட்டறை

கோவை ஆர்.எஸ்.புரம் பொன்னுரங்கம் ரோட்டில் வசிப்பவர் பியூஸ் ஜெயின் (வயது 35). இவர் ஸ்ரீனிவாசராகவ ரோட்டில் நகைப்பட்டறை நடத்தி வருகிறார்.

இவரிடம் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சதாம் உசேன் (28) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

இந்த நகைப்பட்டறையில் தயாரிக்கப்படும் நகைகளில் உள்ள மெல்லிய துவாரங்களை பூசுவதற்காக அருகில் உள்ள ஒரு கடைக்கு கொண்டு சென்று கொடுப்பது வழக்கம்.

நகைகளுடன் மாயம்

சம்பவத்தன்று பியூஸ் ஜெயின் ரூ.30 லட்சம் மதிப்பிலான 621 கிராம் எடை உள்ள பிரேஸ்லெட், மூக்குத்தி உள்ளிட்ட நகைகளை சதாம் உசேனிடம் கொடுத்து அனுப்பினார். நகைகளை வாங்கிக் கொண்டு கடைக்கு சென்ற சதாம் உசேன் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பியூஸ் ஜெயின் அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அப்போது அது சுவிட்ச் ஆப் என்று வந்தது.இதனால் சதாம் உசேன் ரூ.30 லட்சம் தங்க நகைகளுடன் மாயமானது தெரிய வந்தது.

வழக்குப்பதிவு

இது தொடர்பாக பியூஸ் ஜெயின் அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையுடன் மாயமான சதாம் உசேனை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்