தொழிலாளி அடித்துக் கொலை

குடிபோதை தகராறில் கூலித்தொழிலாளி அடித்துகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அண்ணன்- தம்பி கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-14 19:30 GMT

கோவை

குடிபோதை தகராறில் கூலித்தொழிலாளி அடித்துகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அண்ணன்- தம்பி கைது செய்யப்பட்டனர்.

இந்த கொலை பற்றிய விவரம் வருமாறு:-

குடிபோதையில் தகராறு

கோவையை அடுத்த மாதம்பட்டி அருகே கரடிமடையை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது55). கூலித்தொழிலாளி.

கோவையை அடுத்த காளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோகுல். இவர் பேரூர் பகுதி தி.மு.க. இளைஞர் அணி செயலாளர். இவருடைய அண்ணன் ராகுல். இவர்கள் 2 பேரும் காளம்பாளையத்தில் மதுபார் நடத்தி வருகின்றனர்.

அங்கு செல்வராஜ் மதுகுடித்துக் கொண்டு இருந்தார். அப்போது அவருக்கும், கோகுல், ராகுல் ஆகியோருக்கும் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்கள் 2 பேரும் சேர்ந்து செல்வராஜை சரமாரியாக தாக்கினர்.

பிணமாக கிடந்தார்

இந்தநிலையில் அங்குள்ள ஒரு தோட்டத்தில் செல்வராஜ் நேற்று பிணமாக கிடந்தார். இதை நேற்று அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பேரூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கிருந்த செல்வராஜின் உறவினர்கள், போலீசாரை முற்றுகையிட்டனர்.

அவர்கள், செல்வராஜ் அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளதாகவும், கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முறையிட்டனர்.

இதைத்தொடர்ந்து பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ பாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று செல்வராஜின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனால் அவர்கள் சமாதானம் அடைந்தனர்.

அண்ணன்-தம்பி கைது

இதையடுத்து செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பேரூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கோகுல், அவருடைய அண்ணன் ராகுல் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இந்த கொலை குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, செல்வராஜ் குடிபோதை தகராறில் கோகுல், ராகுல் ஆகியோரின் குடும்பத்தினரை அவதூறாக பேசி உள்ளார். இதனால் தாக்கப் பட்டு உள்ளார்.

பின்னர் செல்வராஜ் வீட்டுக்கு சென்று விட்டார். அங்குள்ள ஒரு ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று உள்ளார். பின்னர் மீண்டும் மதுகுடித்துவிட்டு ஒரு தோட்டத்துக்கு சென்று அதன்பிறகு இறந்துள்ளார்.

தற்போது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றனர். தொழிலாளி கொலை வழக்கில் 2 பேர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்