தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

மனைவி, மகளை பார்க்க முடியாததுடன் பொய் வழக்கு போடுவதாக போலீசார் மிரட்டுவதால் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

Update: 2023-07-24 19:21 GMT

மனைவி, மகளை பார்க்க முடியாததுடன் பொய் வழக்கு போடுவதாக போலீசார் மிரட்டுவதால் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே விஸ்வநாதபுரம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் மேகராஜ்(வயது 32). தொழிலாளி. இவர் நேற்று தனது தாயாருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டரின் கார் நிற்கும் பகுதியின் அருகே வந்தவுடன் திடீரென மேகராஜ் தான் மறைத்து வைத்து இருந்த மண்எண்ணெய் நிரப்பிய பாட்டிலை வெளியே எடுத்து தனது உடம்பில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார்.

இதை பார்த்த வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கியதுடன் மேகராஜ் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரிடம் உடம்பில் மண்எண்ணெய் ஊற்றியது ஏன்? என போலீசார் விசாரணை நடத்தினர்.

கருத்து வேறுபாடு

அப்போது அவர், எனக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. எனக்கும், என் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால் என்னிடம் கோபித்துக்கொண்டு என் மனைவி, எனது மகளை அழைத்துக்கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

நான் மனைவி, மகளை சமாதானப்படுத்தி என் வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக மாமனார் வீட்டிற்கு சென்றால் அவர்கள் என்னை தாக்கி, அவமானப்படுத்தி திருப்பி அனுப்பி வைக்கின்றனர். என் மனைவியையும், மகளையும் சந்திக்க முடியவில்லை.

பொய் வழக்கு போடுவதாக போலீசார் மிரட்டல்

இது குறித்து நாச்சியார்கோவில் போலீஸ் நிலையத்தில் நான் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்வோம் என போலீசார் மிரட்டுகின்றனர்.

மனைவி, மகளை பார்க்க முடியாத நிலையில் போலீசாரும் மிரட்டுவதால் மனவேதனை அடைந்துள்ளேன். இதனால் எனது நிலையை கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தேன் என்று கூறினார். இதையடுத்து அவரை தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

வழக்கத்தைவிட நேற்று கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அனைவரையும் போலீசார் சோதனை செய்தனர். அவர்கள் கொண்டு வந்த பாட்டிலை திறந்து பார்த்து தண்ணீரா? அல்லது வேறு ஏதேனும் கொண்டு வருகிறார்களா? என சோதனை நடத்தினர். இப்படி போலீசார் விழிப்புடன் இருந்தும் அவர்களை எல்லாம் கடந்து மேகராஜ் மண்எண்ணெய் பாட்டிலை கலெக்டர் அலுவலகத்திற்குள் கொண்டு வந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்