பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் பணியாற்ற வேண்டும் :சார் பதிவாளர்களுக்கு அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தல்

அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படக்கூடாது என்றும் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் பணியாற்ற வேண்டும் எனவும் சார் பதிவாளர்களுக்கு அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2023-10-05 20:58 GMT


கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சார் பதிவாளர்களின் பணித்திறன் தொடர்பான மண்டல சீராய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் ஆலோசனையின் பேரில் மண்டல வாரியாக சார் பதிவாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பத்திரப்பதிவில் தற்போது சர்வர் பிரச்சினை ஏதும் கிடையாது. பத்திர எண்ணிக்கை கூடும்போது அந்த பிரச்சினை இருந்ததாக கடந்த காலங்களில் கூறப்பட்டது. ஆனால் தற்போது நவீன தொழில்நுட்பத்தால் சர்வர் பிரச்சினை ஏற்படுவது இல்லை. பதிவுத்துறையில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பு இல்லாமலும், அரசுக்கு வரக்கூடிய வருவாய் இழப்பு இல்லாமலும் அலுவலர்கள் முறையாக பணியாற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இழப்பு இருக்கக்கூடாது

பதிவுத்துறையில் உள்ள சிறு சிறு குறைகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும். பதிவுத்துறையை பொறுத்தவரை எந்தவித குறைபாடும் இல்லாமல் செயல்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் அரசுக்கு வரக்கூடிய வருவாயில் எந்த வகையிலும் இழப்பு இருக்கக்கூடாது. அதே நேரத்தில் பொதுமக்களுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் சார் பதிவாளர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

அதேபோல் வீடு இருக்கிற மனையை காலி மனையாக பதியக் கூடாது. அதே நேரத்தில் எந்த ஒரு சொத்தாக இருந்தாலும் புகைப்படத்துடன் தான் பதிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்து விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்