சொத்துக்கள் டிஜிட்டல் முறையில் கணக்கெடுக்கும் பணி தீவிரம்
அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துக்கள் டிஜிட்டல் முறையில் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன.;
குத்தாலம்:
அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துக்கள் டிஜிட்டல் முறையில் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன.
டிஜிட்டல் முறையில் கணக்கீடு
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் டிஜிட்டல் முறையில் கணக்கிடப்பட்டு அறநிலையத்துறை பெயர் பதிக்கப்பட்ட எல்லைக்கல் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட 1,350 கோவில்களுக்கு சொந்தமான 24,500 ஏக்கர் நிலங்களில் 14,578 ஏக்கர் நிலங்கள் வருமானம் ஈட்டா சொத்துக்களாக கண்டறியப்பட்டுள்ளன.
வீரட்டேஸ்வரர்
இதற்காக பயிற்சி பெற்ற லைசென்ஸ் சர்வேயரை கொண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாக்களுக்கு ஒரு குழுவும், குத்தாலம், மயிலாடுதுறை தாலுகாக்களுக்கு ஒரு குழுவும் நியமித்து மயிலாடுதுறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் முத்துராமன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி குத்தாலம் அருகே பெருஞ்சேரி கிராமத்தில் வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை தனி தாசில்தார் விஜயராகவன் தலைமையில் வீரட்டேஸ்வரர் கோவில் செயலாளர் கோவிந்தராஜன், கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பு
இதுகுறித்து தனி தாசில்தார் விஜயராகவன் கூறுகையில், நில அளவை செய்யப்படும் அனைத்து கோவில் நிலங்களும், மென்பொருள் வாயிலாக வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு அவற்றுக்கான அட்சரேகை மற்றும் தீர்க்க ரேகை அளவிட்டு எண்கள் பதிவு செய்யப்படுவதாகவும், இதன் காரணமாக பிற்காலங்களில் எந்த நேரத்திலும் மேற்படி பதிவு குறியீடுகளை கொண்டு கோவில் நிலங்களை கண்டறியலாம்.
குறிப்பாக கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை எளிதில் கண்டறியலாம் என தெரிவித்தார்.