மகளிர் உரிமைத்தொகை திட்டம்: மனுக்களை அரசே நிராகரித்துவிட்டு மேல்முறையீடு செய்ய சொல்வது நியாயமா? ஆர்.பி.உதயகுமார் கேள்வி

மகளிர் உரிமைத்தொகை வழங்குவதில் அரசே மனுக்களை நிரா கரித்துவிட்டு மேல்முறையீடு செய்ய சொல்வது நியாயமா? என்று ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2023-09-22 20:00 GMT


மகளிர் உரிமைத்தொகை வழங்குவதில் அரசே மனுக்களை நிரா கரித்துவிட்டு மேல்முறையீடு செய்ய சொல்வது நியாயமா? என்று ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

காவிரி நீர்

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசின் ஒவ்வொரு செயல்பாடுகள், திட்டங்கள், தோல்வியில் தான் முடிகின்றன. குரங்கிடம் சிக்கிய பூமாலை போல அரசின் நிர்வாகம் உள்ளது. காவிரி விவகாரத்தில் ஜெயலலிதா பெற்று தந்த உரிமையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இழந்து விட்டார். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த போது வறட்சி என்பதே இல்லாமல் இருந்தது. காவிரியின் கடைமடை வரை தண்ணீர் பாய்ந்தது. ஆனால் இப்போது நமக்கு கிடைக்க வேண்டிய நீர் உரிமை கூட நமக்கு கிடைக்காமல் போய் விட்டது. டெல்டா மாவட்ட விவசாயிகள் மிகுந்த துயரத்தில் இருக்கின்றனர். காவிரியில் தண்ணீர் கிடைக்காதது போல, முல்லை பெரியாறு அணையில் இருந்தும் தண்ணீர் கிடைக்காமல் போய் விடுவோேமா, நமது உரிமையை இழந்து விடுவோமா என மதுரை உள்பட 5 மாவட்ட விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

நிராகரிப்பு

ஒரு கையெழுத்தில் நீட் ரத்து செய்யப்படும் என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த உதயநிதி ஸ்டாலின், இப்போது நீட்டை ஒழிக்க 1 கோடி பேர் கையெழுத்து போட வேண்டும் என்கிறார்..தேர்தலின் போது அனைத்து மகளிருக்கும் ரூ.1000 தருவோம் என்றனர். இப்போது அதற்கு சில விதிமுறைகளை புகுத்தி விட்டனர். 1 கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பம் செய்ததில் 57 லட்சம் மனுக்களை நிராகரித்துவிட்டனர். இந்த நிராகரித்த மனுக்கள், மேல்முறையீடு செய்யலாம் என்கின்றனர். மனுக்களை அரசே நிராகரித்து விட்டு மேல்முறையீடு செய்ய சொல்வது நியாயமா?. மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்யாதவர்களுக்கும் குறுஞ்செய்தி வருவதாகவும், சிலருக்கு பணம் கிடைத்திருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. எனவே இந்த திட்டம் குளறுபடியின் உச்சமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்