கூடுதல் பொது சுகாதார வளாகம் அமைக்க பெண்கள் கோரிக்கை

கூடுதல் பொது சுகாதார வளாகம் அமைக்க பெண்கள் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Update: 2022-12-05 18:58 GMT

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இதில் குரும்பலூர் பேரூராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 3 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் கலெக்டர் அலுவலகம் வந்து வருவாய் அலுவலரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், எங்கள் தெருவில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் ஒரே ஒரு பொது சுகாதார வளாகம்தான் உள்ளது. இதனால் அந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்துவதில் பொதுமக்களிடையே தினமும் தகராறு ஏற்பட்டு வருகிறது.

கூடுதல் சுகாதார வளாகம்

மேலும் அந்த சுகாதார வளாகத்திற்கு செல்லும் வழியில் கழிவுநீர் ஓடை உள்ளது. ஓடையில் அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் மீது பாதுகாப்பற்ற நிலையில் நடந்து சுகாதார வளாகத்திற்கு சென்று வர வேண்டியிருக்கிறது. எனவே எங்கள் தெருவில் கூடுதலாக பொது சுகாதார வளாகம் அமைக்கவும், ஏற்கனவே உள்ள பொது சுகாதார வளாகத்திற்கு ஓடையை கடப்பதற்கு தடுப்பு சுவருடன் கூடிய பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

பள்ளி கட்டிடம் பழுது

குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டாங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கொடுத்த மனுவில், பள்ளியின் கட்டிடம் பழுதடைந்து உள்ளது. மழைக்காலமாக இருப்பதால் போர்க்கால அடிப்படையில் பள்ளி கட்டிடத்தை புதுப்பித்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர். வேப்பந்தட்டை தாலுகா, நூத்தப்பூர் பாளையம் வடக்கு பகுதியில் வசிக்கும் பொதுமக்களில் சிலர் வந்து கொடுத்த மனுவில், வனத்துறை நிலத்தின் ஓரமாக சுமார் 30 குடும்பங்கள் வசித்து வருகிறோம். ஆனால் பாதை வசதி இல்லாததால் மாணவ-மாணவிகள் பள்ளி சென்று வர சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், என்று கூறியிருந்தனர்.

ஏரிகளை தூர்வார வேண்டும்

நாம் தமிழர் கட்சியின் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், திருமாந்துறை-லெப்பைக்குடிக்காடு நெடுஞ்சாலையில் சோலார் மின் விளக்குகள் பொருத்த வேண்டும். லெப்பைக்குடிகாடு வெள்ளாறு மற்றும் ஏரியை தூர்வார வேண்டும். பென்னகோணம் ஊராட்சியை சேர்ந்த பழைய ஐ.ஓ.பி. பின்புறத்தில் உள்ள குடியிருப்பிலும், ஏ.பி. அவென்யூ குடியிருப்பிலும் உள்ள மின் கம்பங்களில் விளக்குகள் பொருத்த வேண்டும். அங்குள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். மேலும் பழைய ஐ.ஓ.பி. பின்புறத்தில் உள்ள குடியிருப்பில் கழிவுநீர் செல்ல வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

கைக்குழந்தையுடன் வந்து பெண் மனு

வேப்பந்தட்டை தாலுகா, தொண்டமாந்துறையை சேர்ந்த ராஜேந்திர பிரசாத்தின் மனைவி உஷா தனது 5 மாத பெண் குழந்தையுடன் வந்து கொடுத்த மனுவில், எனக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி திருமணம் நடந்தது. எனது கணவர் உடல்நலக்குறைவால் கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி இறந்து விட்டார்.

இதனால் வருமானமின்றி குழந்தையோடு தவித்து வருகிறேன். டிப்ளமோ மெடிக்கல் லேப் டெக்னாலஜி படித்துள்ள எனக்கு எதிர்கால நலன் கருதி ஏதாவது அரசு வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 296 மனுக்கள் பெறப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்