முல்லைப்பெரியாற்றின் கரையில் விளக்கு ஏற்றி பெண்கள் வழிபாடு
ஆடிப்பெருக்கையொட்டி முல்லைப்பெரியாற்றின் கரையில் விளக்கு ஏற்றி பெண்கள் வழிபாடு நடத்தினர்.
முல்லைப்பெரியாறு
ஆடிப்பெருக்கையொட்டி நீர்நிலைகளில் பெண்கள் புனித நீராடுவார்கள். பின்னர் ஆற்றின் கரையோரத்தில் விளக்கு ஏற்றி பெண்கள் தாலிபாக்கியம் வேண்டியும், செல்வம் பெருகவும், திருமணமாகாத பெண்கள் திருமண தடை நிவர்த்தி வேண்டியும் பிரார்த்தனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று ஆடிப்பெருக்கையொட்டி வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் ஏராளமான பெண்கள் குவிந்தனர். அவர்கள் ஆற்றில் நீராடி விட்டு, கரையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். பின்னர் பெண்கள் புதிய தாலிக்கயிற்றை மாற்றினர். இதில் வீரபாண்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
வீரபாண்டி கவுமாரியம்மன், பத்ரகாளிபுரம் பத்ரகாளி அம்மன் கோவில், உப்புக்கோட்டை அங்காள பரமேஸ்வரி கோவில், கன்னிகாபரமேஸ்வரி கோவில்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் 16 வகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பெண்கள் அம்மனுக்கு கூழ் படைத்து பக்தர்களுக்கு வழங்கினர்.
போடி
போடியில் கொட்டக்குடி ஆற்றின் கரையில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஆடிப்பெருக்ைகயொட்டி, போடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு தாலிபாக்கியம் வேண்டி விளக்குகளை ஏற்றி வழிபட்டனர். பின்னர் ஆற்றங்கரையில் புதிய தாலிக்கயிற்றை பெண்கள் மாற்றிக்கொண்டனர். பூஜையின்போது, ஆற்றங்கரையில் அதிக பெண்கள் வந்து குவிந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கம்பம் கவுமாரியம்மன்
கம்பம் கவுமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு மஞ்சள், இளநீர், தயிர், பச்சரிசி மாவு உள்ளிட்ட 11 வகை அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம், விபூதி, குங்குமம், வளையல்கள், தாலி கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது. பெண் பக்தர்கள் மாங்கல்ய பூஜை செய்து தாலி கயிறு மாற்றிக் கொண்டனர்.
இதேபோல் கம்பத்தில் உள்ள கம்பராயப் பெருமாள் கோவில், காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் உள்ள விசாலாட்சியம்மன், சாமாண்டியம்மன் கோவில், காமாட்சியம்மன் கோவில், வேலப்பர் கோவில், வேணுகோபாலகிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை கோவில் முன்பு உள்ள முல்லைப்பெரியாற்றில் புனித நீராடிவிட்டு, பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர். பின்னர் புதிய தாலிக்கயிற்றை பெண்கள் மாற்றிக்கொண்டனர்.