கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்க சென்ற பெண்கள் ஏமாற்றம்

மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையம் இயங்காததால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்க சென்ற பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2023-09-27 20:08 GMT

மகளிர் உரிமைத் தொகை திட்டம்

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறியபடி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த 15-ந்தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் தகுதி வாய்ந்த குடும்ப தலைவியின் வங்கி கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் அந்தந்த தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ரூ.1,000 கிடைக்காத பெண்கள் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பிக்க தினமும் ஏராளமானோர் செல்கின்றனர்.

இந்தநிலையில், மண்ணச்சநல்லூர் தாலுகாவுக்குட்பட்ட சமயபுரம், மண்ணச்சநல்லூர், திருப்பைஞ்சீலி, திருவெள்ளறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பெண்கள் நேற்று காலை தாலுகா அலுவலகம் திறப்பதற்கு முன்பாகவே இ-சேவை மையத்திற்கு வந்து காத்திருந்தனர். ஆனால் ஊழியர்கள் வராததால் காலை 11 மணி வரை இ-சேவை மையம் திறக்கவில்லை. இதனால், பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் அவர்கள் தாலுகா அலுவலக அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

தனியார் சேவை மையம்

இதையடுத்து, மண்ணச்சநல்லூர் தாசில்தார் அருள்ஜோதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கிருந்த பெண்களை சமாதானம் செய்தனர். பின்னர் இ-சேவை மைய ஊழியர்கள் வராததால் இ-சேவை மையம் இயங்காது என்ற அறிவிப்பை அந்த அலுவலகத்தின் சுவற்றில் அலுவலர்கள் ஒட்டினர். இதைத்தொடர்ந்து தாலுகா அலுவலகம் எதிரே உள்ள தனியார் சேவை மையத்திற்கு சென்று பெண்கள் விண்ணப்பித்தனர். அரசு நலத்திட்டங்களை பெறுவதற்காக இ-சேவை மையம் எப்போதும் இயங்க வேண்டும் என்றும், பணியாளர் விடுமுறையில் சென்று விட்டால் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்