குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்

பேராம்பூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-11 18:48 GMT

தண்ணீர் வரவில்லை

விராலிமலை ஒன்றியம், பேராம்பூரில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு அப்பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணற்றிலிருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

எனினும் அந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வினியோகம் செய்யப்படும் தண்ணீர் அனைத்து பகுதிகளுக்கும் சீரான அளவில் வினியோகம் செய்யப்படாமல் பற்றாக்குறையாக இருந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். அதில் பேராம்பூரில் உள்ள வடக்கு தெருவிற்கு தொடர்ந்து மாதக்கணக்கில் சரிவர தண்ணீர் வரவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.

சாலை மறியல்

அதேபோல நேற்றும் காலையிலிருந்து பேராம்பூர் வடக்கு தெருவிற்கு தண்ணீர் வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு நேற்று மாலை 6.30 மணியளவில் காலிக்குடங்களுடன் விராலிமலை- கீரனூர் சாலையில் பேராம்பூர் பஸ் நிறுத்தம் அருகே மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் சுமார் 40 நிமிடங்கள் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாத்தூர் போலீசார் மற்றும் பேராம்பூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் சித்ராபாண்டி சுப்பையா மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் பேராம்பூர் வடக்கு தெருவிற்கு சீரான தண்ணீர் வினியோகம் செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியதன் பேரில் பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்