குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் செய்தனர்.
தண்ணீர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வி.புதூர் கிராமத்தின் ஒரு பகுதி கீழராஜகுலராமன் ஊராட்சியாகவும், மற்றொரு பகுதி மேலராஜகுலராமன் ஊராட்சியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மேலராஜ குலராமன் ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இதன் அருகே உள்ள கீழராஜகுலராமன் கண்மாய் கரையில் இரண்டு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக குடிநீர் கிடைக்கும் ஆழ்துளை கிணறில் மண் மூடியதால் தண்ணீர் தடைபட்டது. எனவே அதன் அருகே ஊராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக ஒரு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக மின் மோட்டார் பொருத்த சென்ற பணியாளர்களை, கீழராஜ குலராமன் ஊராட்சியை சேர்ந்த சிலர் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 40 நாட்களுக்கு மேலாக குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
சாலை மறியல்
இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து நேற்று காலி குடங்களுடன் ஆலங்குளம் சாலையில் பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ப்ரீத்தி, இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் வருவாய் துறையினரும், மேல ராஜகுலராமன் பஞ்சாயத்து தலைவர் விவேகானந்தன் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்த பொது மக்கள், பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சமாதானக் கூட்டம் மூலம் பொதுமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் சீனிவாசன் உறுதியளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட மக்கள் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.