கங்கைகொண்டான் பஞ்சாயத்து அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை

கங்கைகொண்டான் பஞ்சாயத்து அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-06-20 19:36 GMT

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான வடகரை, நேதாஜி நகர் கிராமங்களில் கடந்த 3 மாதங்களாக தாமிரபரணி குடிநீரில் சாக்கடை மற்றும் கழிவு நீர் கலந்து வருவதாகவும், இதுபற்றி இப்பகுதி மக்கள் மானூர் யூனியன் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு கொடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி ஆண்கள், பெண்கள் ஏராளமானோர் காலிக்குடங்களுடன் நேற்று காலை கங்கைகொண்டான் வடகரை நாட்டாண்மை முத்துராஜ், சங்கரலிங்கம் மற்றும் மானூர் யூனியன் 15-வது வார்டு கவுன்சிலர் மாலதி ஆகியோர் தலைமையில் கங்கைகொண்டான் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்னர் சாலைமறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து வேப்பங்குளம், கலப்பைப்பட்டி, கொடியங்குளம், கைலாசபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

தகவல் அறிந்ததும் தாசில்தார் சுப்பிரமணியன், தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கங்கைகொண்டான் இன்ஸ்பெக்டர் பெருமாள், மானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்ராஜ், வருவாய் ஆய்வாளர் அமுதா, கிராம நிர்வாக அலுவலர் முத்துசெல்வி, யூனியன் பொறியாளர் பியூலா ஆகியோர் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில், உடனடியாக தண்ணீர் வழங்க திட்டப்பணிகள் தொடங்கப்படும் என கூறினர். அதைத்தொடர்ந்து அங்கு மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்