பாதுகாக்கப்பட்ட குடிநீர் கேட்டு தண்ணீர் லாரியை சிறை பிடித்து காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்

பாதுகாக்கப்பட்ட குடிநீர் கேட்டு தண்ணீர் லாரியை சிறை பிடித்து காலி குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-21 06:31 GMT

சென்னை மாநகராட்சி மணலி மண்டலம் 16-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சடையங்குப்பம், பர்மா நகர், இருளர் காலனி பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களைச் சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் நிறைந்து காணப்படுவதால் நிலத்தடி நீர் கெட்டு, அது குடிப்பதற்கும், குளிப்பதற்கும் பயன்படாத வகையில் மாறிப்போய்விட்டது.

இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் வாரியம் சார்பில் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுவதாலும், கனரக வாகனங்கள் குடிநீர் குழாய்கள் மீது ஏறி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் குழாய்கள் முற்றிலும் சேதம் அடைந்துவிட்டதாலும் குடிக்க தண்ணீர் இல்லாமல் அப்பகுதி மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

இதையடுத்து தண்ணீர் லாரிகள் மூலம் அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் லாரிகள் மூலம் வழங்கப்படும் தண்ணீரில் பாசி மற்றும் சிறு மீன்கள், பூச்சிகள் வருகிறது. இதனால் அதை குடிக்க பயன்படுத்த முடியவில்லை.

இதனால் பல்வேறு நோய்கள் வருவதாக கூறி தங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று காலை 8 மணியளவில் மாநகராட்சி சார்பில் குடிநீர் வழங்க வந்த தண்ணீர் லாரியை சிறை பிடித்த பெண்கள், காலி குடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த சாத்தாங்காடு போலீசார், இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்