கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 பேரக்குழந்தைகளுடன் பெண் பலி

திண்டிவனம் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 பேரக்குழந்தைகளுடன் பெண் பலியானார்.

Update: 2022-06-01 19:19 GMT

திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தென்களவாய் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 37). இவர் சென்னையில் தனியாக தங்கி, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி விஜிஸ்ரீ. இவர்களுக்கு வினோதினி (13), ஷாலினி (10) என்ற 2 மகள்களும், கிருஷ்ணராஜ் (8) என்ற மகனும் இருந்தனர். இதில் வினோதினி திண்டிவனத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 7-ம் வகுப்பும், ஷாலினி 5-ம் வகுப்பும், கிருஷ்ணராஜ் 4-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்த நிலையில் விஜிஸ்ரீ தனது அண்ணன் மகன் திருமணத்தில் பங்கேற்பதற்காக தென்களவாயில் இருந்து குடும்பத்துடன் கடந்த 30-ந்தேதி திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் கிராமத்திற்கு வந்துள்ளார். பின்னர் திருமணம் முடிந்ததும், அதே பகுதியில் வசிக்கும் தனது தாய் புஷ்பராணி (60) வீட்டில் தங்கியிருந்தார். இதற்கிடையே பெருமுக்கலில் உள்ள விஜிஸ்ரீயின் உறவினர் இல்ல நிகழ்ச்சி வருகிற 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான பொருட்கள் வாங்குவதற்காக நேற்று விஜிஸ்ரீ, தனது உறவினர்களுடன் வெளியூர் சென்றதாக கூறப்படுகிறது.

கல்குவாரி குட்டை

இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணியளவில் புஷ்பராணி, அதே பகுதியில் உள்ள கல்குவாரிக்கு சென்று துணி துவைக்க முடிவு செய்ததாக தெரிகிறது. அதன்படி அவர் தனது பேரக்குழந்தைகள் 3 பேரையும் பெருமுக்கலில் இருந்து கீழ்அருங்குணம் செல்லும் சாலையில் உள்ள கல்குவாரிக்கு அழைத்துச் சென்றார். அங்கு சுமார் 80 அடி ஆழமுள்ள கல்குவாரி குட்டையின் கரையில் புஷ்பராணி அமர்ந்து துணி துவைத்து விட்டு, குளித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் குழந்தைகள் 3 பேரும் அடுத்தடுத்து குட்டையில் தவறி விழுந்துள்ளனர். இதை பார்த்து செய்வதறியாது திகைத்த புஷ்பராணி, பேரக்குழந்தைகள் 3 பேரையும் காப்பாற்ற முயற்சி செய்தார். இதில் அவரும் தவறி விழுந்ததில் 4 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர். சிறிது நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கி 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

4 பேர் பலி

இதற்கிடையே அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கல்குவாரி குட்டையில் புஷ்பராணி மற்றும் 3 குழந்தைகள் பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கல்குவாரி குட்டையில் இறந்து கிடந்த புஷ்பராணி, வினோதினி, ஷாலினி, கிருஷ்ணராஜ் ஆகியோரது உடல்களை கைப்பற்றி அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து போலீசார், பலியான 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்குப்தா, மரக்காணம் தாசில்தார் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து 4 பேர் பலியான குட்டையை பார்வையிட்டனர்.

விசாரணை

தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குட்டையில் மூழ்கி பேரக்குழந்தைகள் 3 பேருடன் பெண் பலியான சம்பவம் பெருமுக்கல், தென்களவாய் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்