ரெயில் சக்கரத்தில் சிக்கி பெண் பலி

கோவில்பட்டியில் ரெயில் சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார்.

Update: 2022-08-28 16:15 GMT

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஓ.லட்சுமிநாராணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லிங்கசாமி மனைவி பேபிசாந்தி (வயது 52). இவர் செங்கல்பட்டில் உள்ள தனது உறவினரின் இல்ல திருமண நிகழ்ச்சிக்காக கோவில்பட்டியில் இருந்து ரெயிலில் செல்ல திட்டமிட்டார்.

அதன்படி நேற்று காலையில் கோவில்பட்டியில் ரெயில் நிலையத்திற்கு பேபிசாந்தி வந்தார். அவர் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுத்தார். பின்னர் 2-வது நடைமேடையில் ரெயிலுக்கு காத்திருந்தார்.

அப்போது நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அந்த ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பேபி சாந்தி தவறுதலாக ஏறியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் அவசரமாக கீழே இறங்க முயன்றார். ஆனால் அதற்குள் ரெயில் புறப்பட்டது. இதில் நிலைதடுமாறிய பேபிசாந்தி ரெயில் தண்டவாளத்தில் தவறி விழுந்தார். ரெயில் சக்கரங்கள் ஏறியதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் மற்றும் போலீசார், பேபி சாந்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்