மெட்ரோ ரெயில் கதவுக்கு நடுவே கைக்குழந்தையுடன் சிக்கிய பெண், ஊழியர்களின் அலட்சியத்தை கண்டித்து தர்ணா

சென்னை ஐகோர்ட்டு ரெயில் நிலையத்தில் ஏறியபோது மெட்ரோ ரெயில் கதவுக்கு நடுவே கைக்குழந்தையுடன் பெண் உள்பட 3 பேர் சிக்கிக்கொண்டனர். இதற்கு சரியான பதில் அளிக்காத ஊழியர்களின் அலட்சியத்தை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-27 04:56 GMT

கதவுக்கு நடுவே சிக்கினர்

சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் பிரியா. இவர், நேற்று முன்தினம் இரவு தனது கைக்குழந்தை மற்றும் உறவினர்களுடன் சென்னை ஐகோர்ட்டு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து கடைசி மெட்ரோ ரெயிலில் புதுவண்ணாரப்பேட்டைக்கு செல்ல காத்திருந்தார். பின்னர் மெட்ரோ ரெயில் வந்து நின்று கதவுகள் திறந்ததும் அவர் ஏற முயன்றார். ஆனால் அதற்குள் மெட்ரோ ரெயில் தானியங்கி கதவு மூடியதால் கைக்குழந்தையுடன் பிரியா, அவருடைய தம்பி மற்றும் மற்றொரு பெண் ரெகேனா ஆகிய 3 பேரும் மெட்ரோ ரெயில் கதவுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டனர்.

கதவுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு 3 பேரும் வலியால் அலறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரெயிலுக்குள் நின்ற சக பயணிகள், கைக்குழந்தையுடன் சிக்கிய பிரியா உள்பட 3 பேரையும் உடனடியாக ரெயிலின் உள்ளே இழுத்தனர். இதில் 3 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் மெட்ரோ ரெயிலின் கதவுகள் தானாக மூடப்பட்டு ரெயில் புறப்பட்டு சென்றது.

தர்ணா போராட்டம்

புதுவண்ணாரப்பேட்டை ரெயில் நிலையத்தில் இறங்கிய பிரியா மற்றும் உறவினர்கள் இது குறித்து மெட்ரோ ரெயில் டிரைவரிடம் கேட்டனர். ஆனால் அவர் முறையாக பதில் கூறாமல் மெட்ரோ ரெயிலை ஓட்டிச் சென்றுவிட்டார். இதுபற்றி அவர்கள், புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்த ஊழியர்களிடம் கேட்டபோது, அவர்களும் உரிய பதில் அளிக்காமல் அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பிரியா உள்ளிட்ட உறவினர்கள் மற்றும் அங்கிருந்த பயணிகள் என 10-க்கும் மேற்பட்டோர் புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வாக்குவாதம்

இதற்கிடையே பிரியாவின் கணவர் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வந்தார். ஆனால் அவரை உள்ளே செல்ல ஊழியர்கள் அனுமதிக்காமல், பயணிகள் நேரம் முடிந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் ஊழியர்களுடன் அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பயணிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தில் நள்ளிரவில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்