நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
கணபதி, ஜூலை
கோவையில் நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நகை பறிப்பு
கோவை கணபதி அருகில் உள்ள கணபதி மாநகர் பகுதியில் குடியிருந்து வருபவர் இளங்கோ.அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது64).இவர் தினசரி நடைப்பயிற்சி செய்யும் பழக்கம் கொண்டவர். இந்த நிலையில் சம்பவத்தன்று இவர், தனது வீட்டின் அருகில் வழக்கம்போல காலை 6.30 மணியளவில் நடைப்பயிற்சி சென்றார். அப் போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், திடீரென அந்த மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையினை பறித்துக்கு கொண்டு தப்பி சென்றனர்.
விசாரணை
இதுகுறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் போலீஸ்இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் சரத்குமார், தலைமைக்காவலர்கள் ராஜேந்திரன், தினேஷ், நந்தகுமார், செந்தில்குமார் அடங்கிய குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது அந்தப்பகுதியில் கிடைத்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு மர்ம ஆசாமிகள் 2 பேரை தீவிரமாக தேடி வந்தனர்.
வாலிபர் கைது
இதில் திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் சின்னராவத்தன்பட்டியை சேர்ந்த திருமூர்த்தி (29) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து ஒரு மோட்டார்சைக்கிள், மற்றும் நகைகளை பறிமுதல் செய்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.