மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி போலீஸ் நிலையம் முற்றுகை
திருப்பத்தூரில் மோட்டார்சைக்கிள் மோதி பெண் பலியானார். இது தொடர்பாக அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மோட்டார்சைக்கிள் மோதல்
திருப்பத்தூர் டவுன் எல்.ஐ.சி. பின்புறம் வசிப்பவர் ராம்பீபி (வயது 65). திருமணம் ஆகாமல தங்கை மற்றும் கூட்டுக் குடும்பத்துடன் வசித்து வந்தார். நீர் நிலை ஆக்கிரமிப்பு பகுதியில்வசித்து வந்ததால் அந்த வீட்டை காலி செய்து, எதிரே உள்ள இஸ்மாயில் பேட்டை, பகுதியில் புதிய வீடு வாடகைக்கு அங்கு வீட்டு சாமான்களை வைத்துவிட்டு நடந்து வந்தார்.
அப்போது கலெக்டர் அலுவலகம் வழியாக ஜோலார்பேட்டை மெயின் ரோட்டில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார். உடனே மோட்டார்சைக்கிளில் வந்த நபர் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் ராம்பீபியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் சென்று மோட்டார் சைக்கிளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
போலீஸ் நிலையம் முற்றுகை
விசாரணையில் தப்பி ஓடியவர் இஸ்மாயில (21) என்பது தெரியவந்தது. அவர் போலீசில் சரணடைந்தார். அப்போது ராம்பீபி உறவினர்கள் இவர் மோட்டார் சைக்கிள் ஓட்டி வரவில்லை, 8-ம் வகுப்பு படிக்கும் சிறுவனதான் ஓட்டிவந்தான் என்று கூறி நகராட்சி கவுன்சிலர் அப்துல் ரசாக் தலைமையில் 60-க்கும் மேற்பட்டோர் டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த நபரை கைது செய்ய வேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.