இரும்புக்கம்பியால் அடித்து பெண் கொலை
வாய்மேடு அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு காதல் மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
வாய்மேடு:
வாய்மேடு அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு காதல் மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
நடத்தையில் சந்தேகம்
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தகட்டூர் பெத்தாச்சிக்காட்டை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருடைய மகன் சுரேஷ் (வயது32). டிரைவர். இவருடைய மனைவி மீனா(29). இவர்கள் இருவரும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
சுரேஷ் சென்னையில் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். இதனால் மனைவி மீனா மற்றும் குழந்தைகள் தாணிக்கோட்டகத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தனர்.
மீனாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இரும்பு கம்பியால் அடித்துக்கொலை
இந்த நிலையில் சென்னையில் இருந்து சுரேஷ் நேற்று முன்தினம் இரவு சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் அவர் மாமனார் வீட்டுக்கு சென்று மனைவி மற்றும் குழந்தைகளை பெத்தாச்சிக்காட்டில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். வீட்டுக்கு வந்ததும் மீனாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் சுரேஷ் தகராறு செய்துள்ளார்.
இதனால் கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் வீட்டில் இருந்த தேங்காய் உரிக்க பயன்படுத்தும் இரும்புக்கம்பியை எடுத்து மீனாவை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சை்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் மீனா பரிதாபமாக உயிரிழந்தார்.
கைது
இதுகுறித்து தகவல் அறிந்த வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.
இது குறித்து வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் காதல் மனைவியை கணவரே அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.