மொபட்டுகள் மீது வாகனம் மோதி பெண் பலி; 5 பேர் படுகாயம்
குலசேகரன்பட்டினம் அருகே மொபட்டுகள் மீது வாகனம் மோதியதில் பெண் பலியானார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
குலசேகரன்பட்டினம்:
தட்டார்மடம் அருகே பெரியதாழை தர்மர் தெருவைச் சேர்ந்தவர் லோகு. இவருடைய மனைவி சரோஜா (வயது 50). இவர்களுடைய மகன் ரேக்சிங்கர் (18). நேற்று காலையில் இவர்கள் 2 பேரும் ஒரு மொபட்டில் மணப்பாடு- பெரியதாழை சாலையில் சென்று கொண்டிருந்தனர். இவர்களுடன் மற்றொரு மொபட்டில் பெரியதாழை சவேரியார் தெருவைச் சேர்ந்த ஆரோக்கியம் மகன் மெர்லின் (41), அவருடைய மனைவி அட்டிலினா (35), மகன்கள் ஆரோன் (9), ஆலன் (7) ஆகியோரும் சென்றனர்.
அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் திடீரென்று 2 மொபட்டுகளின் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் சரோஜா, மெர்லின் உள்ளிட்ட 6 பேரும் படுகாயமடைந்தனர். உடனே அவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சரோஜா பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த மற்ற 5 பேரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.