கடன் தொல்லையால் பெண் தற்கொலை
கடன் தொல்லையால் பெண் தற்கொலை செய்துகொண்டார்.
ராமநாதபுரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் வடக்குதெருவை சேர்ந்தவர் செந்தில்நாதன் (வயது 46). இவரின் மனைவி சுகுணா(38). இவர்களுக்கு சஹானா(15), ஹேமாஸ்ரீ (6) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் ராமநாதபுரம் அரண்மனை சாலையில் சிறிய ஓட்டல் நடத்தி தொழில் செய்து வந்தனர். கடையில் வியாபாரம் சரியாக இல்லாததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாங்கிய கடன்களை அடைக்க முடியாமல் சுகுணா மன வருத்தத்தில் இருந்தாராம்.
இந்தநிலையில் செந்தில்நாதன் தென்னம்பிள்ளை வலசையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தார். குழந்தைகள் இருவரும் அதே பகுதியில் உள்ள சுகுணாவின் தாய் சிவகாமி வீட்டிற்கு தூங்க சென்றனர்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுகுணா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை சிவகாமி தனது மகள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது சுகுணா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.