அரளி விதையை அரைத்து குடித்து பெண் தற்கொலை; 3 பேர் கைது
அரளி விதையை அரைத்து குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நமங்குணம் காலனி தெருவை சேர்ந்தவர் கரும்பாயிரம் (வயது 49). இவர் அப்பகுதியில் டேங்க் ஆபரேட்டராக உள்ளார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (40). இவர் அங்குள்ள அங்கன்வாடியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர்கள் வீட்டின் அருகே வசிக்கும் பாப்பாத்தி (36) என்பவர் கரும்பாயிரத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனைக்கண்ட தமிழ்ச்செல்வி ஏன் எனது கணவருடன் பழகுகிறாய் என்று தட்டி கேட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த பாப்பாத்தி அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை சோதனை செய்தபோது பாப்பாத்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கரும்பாயிரம், அவரது மனைவி தமிழ்ச்செல்வி, உறவினர் பழனியம்மாள் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.