காகிதங்களை எரித்தபோது தீப்பற்றி உடல் கருகிய பெண் சாவு
காகிதங்களை எரித்தபோது தீப்பற்றி உடல் கருகிய பெண் உயிரிழந்தார்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே முனியங்குறிச்சி கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் செல்வம். கூலி தொழிலாளி. இவரது மனைவி வள்ளி(வயது 35). இவருக்கு கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று செல்வம் வேலைக்கு சென்று விட்டநிலையில், வீட்டில் தனியாக இருந்த வள்ளி விறகு அடுப்பில் காகிதங்களை போட்டு கொளுத்தியுள்ளார். அப்போது வள்ளியின் உடையில் தீப்பற்றி உடலில் பரவியது. இதனால் அவர் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து வள்ளியை மீட்டு, சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.