விழுப்புரம் அருகேதொழிலாளி கொலை வழக்கில் பெண் கைது

விழுப்புரம் அருகே தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை செய்த வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-27 18:45 GMT

வளவனூர், 

தொழிலாளி கொலை

விழுப்புரம் அருகே உள்ள பா.வில்லியனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 35), கூலித்தொழிலாளி. இவருடைய பக்கத்து வீட்டில் உறவினரான ஆனந்தராஜ் (40) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 20-ந் தேதி ஆனந்தராஜ் வீட்டின் முன்புள்ள பூவரச மரத்தில் இருந்து காய்ந்த இலைகள், ஹரிகிருஷ்ணன் வீட்டின் முன்பு விழுந்து கிடந்துள்ளன. இதைப்பார்த்த ஹரிகிருஷ்ணன், ஆனந்தராஜிடம் சென்று கேட்டுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்தராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர், ஹரிகிருஷ்ணனை தாக்கியதோடு கத்தியால் குத்தினர். இதில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஹரிகிருஷ்ணன் இறந்தார்.

பெண் கைது

இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில் ஆனந்தராஜ், அவரது மனைவி விஜயா (35) மற்றும் மகன்கள் 3 பேர் என 5 பேர் மீது வளவனூர் போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜ் மற்றும் அவரது 3 மகன்களை கைது செய்தனர். விஜயா தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விஜயாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்