மோசடி வழக்கில் பெண் கைது
எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித் தருவதாக நடந்த மோசடி வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் புஷ்பவல்லி (வயது 42). இவர் தனது மகளை எம்.பி.பி.எஸ். படிக்க வைப்பதற்காக தர்மபுரியில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் சேர்த்திருந்தார். அப்போது திருப்பத்தூரை சேர்ந்த சிலர் புஷ்பவல்லியை தொடர்பு கொண்டு தங்கள் மகளை நீட் தேர்வு எழுதாமலேயே எம்.பி.பி.எஸ். படிக்க நேரடியாக சேர்த்து விடலாம் என ஆசை வார்த்தை கூறி அவரிடம் ரூ.27 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டனர்.
இது குறித்து புஷ்பவல்லி கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்துார் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த திருப்பதூரை அடுத்த புதுப்பேட்டை அம்மனாங்கோவில் கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி வித்யா (36) என்பவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.