விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல்சமுதாயத்தில் பெண்கள் சாதனை படைக்க வேண்டும்:கனிமொழி எம்.பி. பேச்சு

விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் சமுதாயத்தில் பெண்கள் சாதனை படைக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-22 18:45 GMT

சமுதாயத்தில் பெண்கள் விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் சாதனை படைக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி கூறினார்.

கருத்தரங்கம்

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து நடத்திய பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்த கருத்தரங்கம் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நேற்று நடந்தது. கருத்தரங்குக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி கலந்து கொண்டு கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

செல்போனில் ஒரு விஷயத்தை நாம் தேடினால், தொடர்ந்து அது தொடர்பான தகவல்களே வந்து கொண்டிருக்கும். செல்போனை அருகில் வைத்து கொண்டு ஏதேனும் ஒரு விஷயத்தை நாம் பேசிக் கொண்டிருந்தால் கூட, அது தொடர்பான விவரங்கள், விளம்பரங்கள் செல்போனில் வருவதை சில நேரங்களில் பார்த்திருப்போம். அந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து உள்ளது.

பாதுகாப்பு கவசம்

எனவே, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அது தான் நமது முதல் பாதுகாப்பு வளையம். இதையெல்லாம் தேவையில்லை என்று ஒதுக்கிவிட முடியாது.. எனவே, தொழில்நுட்ப வளர்ச்சிகளை நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். அறிவு தான் சிறந்த ஆயுதம், சிறந்த பாதுகாப்பு கவசம். அதனை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு பல்வேறு தடைகளை இந்த சமூகம் போட்டு வைத்து உள்ளது. அவைகளை உடைக்கக்கூடிய காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். எல்லா இடங்களிலும் பிரச்சினைகள் இருக்கின்றன. அந்த பிரச்சினைகளுக்காக நாம் முடங்கி போய்விடக்கூடாது.

நாம் பெண் என்ற பெருமிதமும், திமிரும் பெண்களுக்கு இருக்க வேண்டும். பெண் என்பதற்காக உங்களை யாரும் மிரட்ட அனுமதிக்கக்கூடாது. சமுதாயத்தில் விமர்சனங்களை பற்றியும் கவலைப்படாமல் பெண்கள் சாதனை படைக்க வேண்டும். சைபர் குற்றம் தொடர்பான ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டால், பயப்படாமல் புகார் அளிக்க முன்வர வேண்டும். எந்த மிரட்டலுக்கும் அடிபணிந்துவிடாதீர்கள். தைரியமாக புகார் அளிக்க வேண்டும். உங்களை பாதுகாத்துக் கொள்ள முதலில் நீங்கள் தயாராக இருக்க வேண்டும், என்றார்.

கலந்து கொண்டவர்கள்

கருத்தரங்கில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி, காமராஜ் கல்லூரி முதல்வர் ஜ.பூங்கொடி, தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் காளிராஜ், கல்லூரி செயலாளர் சோமசுந்தரம் மற்றும் திரளான மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்