குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன்கிராம மக்கள் மறியல்
கறம்பக்குடி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மின்மாற்றி பழுது
கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி மற்றும் பட்டத்திக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட சவரியார்பட்டினம் கிழக்கு, சவரியார்பட்டினம் மேற்கு, மயிலாடிதெரு, புதுதெரு ஆகிய 4 கிராமங்கள் உள்ளன. இங்கு 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் சிறு மின்விசை தொட்டிகள் உள்ளன. இவற்றிற்கு மின் வினியோகம் செய்யப்படும் புதுப்பட்டியில் உள்ள மின்மாற்றி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பழுதானது.
நடவடிக்கை இல்லை
எனவே இந்த 4 கிராமங்களுக்கு குடிதண்ணீர் வினியோகம் தடைபட்டது. மேலும் 11 விவசாய மோட்டார்களுக்கும் மின்சாரம் கிடைக்காததால் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் கருக தொடங்கி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், அதிகாரிகளிடம் சென்று பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆதரவுடன் நேற்று மஞ்சுவிடுதி விலக்கு சாலை அருகே மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன், புதுப்பட்டி உதவி மின்பொறியாளர் ஆகியோர் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஒரு வார காலத்தில் மின் மாற்றியை சரிசெய்து குடிநீர் மற்றும் மின் வினியோகம் சீரமைக்கப்படும் என உறுதி வழங்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.