குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

வடகாடு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-09-20 18:31 GMT

சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே அணவயல் எல்.என்.புரம் ஊராட்சிக்கு உட்பட்ட புளிச்சங்காடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆழ்குழாய் மின் மோட்டார் பம்பு பழுது காரணமாக, அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக தற்காலிகமாக காவிரி கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், அந்த தண்ணீர் கலங்கலாக குடிக்க பயன்படுத்த முடியாத அளவில் உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் புளிச்சங்காடு-கைகாட்டி ரவுண்டானா சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் முருகதாஸ், அணவயல் ஊராட்சி செயலாளர் சாமிநாதன் மற்றும் வடகாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் புளிச்சங்காடு-கைகாட்டி ரவுண்டானா சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்