மகளுடன், மின்வாரிய ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

2 ஆண்டுகளுக்கு முன் மனைவி இறந்த சோகத்தில் மின் ஊழியர் மகளுடன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புடவை அறுந்து விழுந்ததால் மற்றொரு மகள் உயிர் தப்பினார்.

Update: 2022-05-31 11:01 GMT

காட்பாடி

2 ஆண்டுகளுக்கு முன் மனைவி இறந்த சோகத்தில் மின் ஊழியர் மகளுடன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புடவை அறுந்து விழுந்ததால் மற்றொரு மகள் உயிர் தப்பினார்.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மனைவி இறந்த சோகம்

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த டி.கே.புரம் கிராமம் ஜெகஜீவன்ராம் தெருவை சேர்ந்தவர் தினகரன் (வயது 52). மின்வாரிய ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சிவக்குமாரி. இவர்களுக்கு பவித்ரா (16), பிருந்தா (14) என 2 மகள்கள் உண்டு. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த சிவக்குமாரி கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் இறந்துவிட்டார்.

மனைவி இறந்ததால் தினகரன் மிகுந்த வேதனையிலும், மன அழுத்தத்திலும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தூக்கமாத்திரைகளை உண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு காப்பாற்றி உள்ளனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

ஆனாலும் தினகரன் விரக்தியிலேயே இருந்துள்ளார். சம்பவத்தன்று இரவு வீட்டின் அறையில் தனது மகள்கள் பவித்ரா, பிருந்தா ஆகியோருடன் மின்விசிறியில், புடவையால் தூக்குப்போட்டுள்ளார். அப்போது புடவை அறுந்ததால் மூத்த மகள் பவித்ரா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தனது தந்தை மற்றும் சகோதரி தூக்கில் தொங்குவதை பார்த்த பவித்ரா அலறி கூச்சலிட்டார். இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் தினகரன், அவருடைய மகள் பிருந்தா ஆகிய இருவரும் இறந்து விட்டனர்.

நிர்க்கதியாக நிற்கும் மகள்

இந்த சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே தாயை இழந்த சோகத்தில் இருந்த பவித்ரா தற்போது தந்தை, சகோதரியையும் இழந்து நிர்கதியாக நிற்கிறார்.

மனைவி இறந்த சோகத்தில் கணவனும், மகளும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டி.கே.புரம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்