உடுமலையில் அதிகாலையில் கடும் பனி மூட்டம் நிலவியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
கடும் பனிப்பொழிவு
தமிழர்கள் பருவநிலையை கார்காலம், குளிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனில்காலம், முதுவேனில்காலம் என 6 பருவங்களாக பிரித்துள்ளனர். அதன்படி கார்த்திகை, மார்கழி மாதங்கள் முன்பனிக்காலம் (அதிகாலையில் பனி பொழியும்) எனவும், தை, மாசி மாதங்கள் பின்பனிக்காலம் (காலையில் பனி பொழியும்) எனவும் அழைக்கப்படுகிறது. ஆனால் புரட்டாசி, ஐப்பசி மாதங்கள் குளிர்காலம் எனக் குறிப்பிடப்பட்டாலும் ஐப்பசியில் அடைமழையால் ஏற்படும் குளிராகவே இருக்கும்.
ஆனால் தற்போது உலகம் முழுவதும் பல்வேறுவிதமான பருவநிலை மாற்றங்கள் ஏற்படுகிறது. அதன்படி கடும் கோடையில் அடை மழையும், மழைக்காலங்களில் கத்திரி வெயிலும் என மாறி மாறி அடிப்பது சகஜமான விஷயமாக மாறிவிட்டது. அந்தவகையில் உடுமலை பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று அதிகாலையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.
மருத்துவ முகாம்கள்
இதனால் முக்கிய சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மேலும் திடீர் பனிப்பொழிவால் பயிர் பாதிப்பு ஏற்படுமோ என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
தொடர் மழை மற்றும் மாறி மாறிவரும் சீதோஷ்ண நிலையால் பொதுமக்கள் சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.