மூன்று பிரிவு சாலை முகப்பில் வேகத்தடை அமைக்கப்படுமா?
மூன்று பிரிவு சாலை முகப்பில் வேகத்தடை அமைக்கப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே மூன்று பிரிவு சாலை முகப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூன்று பிரிவு சாலைகள்
கூத்தாநல்லூர் அருகே உள்ள கோரையாறு பாலத்தை மையமாக கொண்டு வடகோவனூர் சாலை, மன்னார்குடி சாலை, திருவாரூர் சாலை என மூன்று பிரிவு சாலைகள் உள்ளன. இதில் திருவாரூர் மற்றும் மன்னார்குடி வழித்தட சாலையில் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், நாகப்பட்டினம், நாகூர், காரைக்கால், மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி போன்ற ஊர்களுக்குச்சென்று வரக்கூடிய அரசு-தனியார் பஸ்கள், பள்ளி- கல்லூரி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள், கனரக வாகனங்கள் என தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
வேகத்தடை அமைக்க வேண்டும்
அதேபோல் வடகோவனூர் சாலையில் 30-க்கும் மேற்பட்ட கிராமப்புற பகுதிகளுக்கு சென்று வரக்கூடிய வாகனங்கள் சென்று வருகின்றன. கோரையாறு பாலத்தை மையமாக கொண்ட முகப்பில் மூன்று பிரிவு சாலைகளிலும் சென்று வரக்கூடிய வாகனங்கள் எதிர் எதிரே வருவது எளிதில் தெரிவதில்லை. மேலும் மூன்று பிரிவு சாலைகளிலும் வாகனங்கள் வேகமாக செல்கின்றன.
இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே வாகனங்கள் வேகமாக செல்வதை கட்டுப்படுத்தவும், விபத்துகளை தவிர்க்கவும் கோரையாறு பாலத்தை மையமாக கொண்ட மூன்று பிரிவு சாலை முகப்பிலும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.