குறைந்த வாடகையில் தங்கும் அறை, கூடுதலாக டிக்கெட் வழங்கும் மையம் ஏற்படுத்தப்படுமா?

குறைந்த வாடகையில் தங்கும் அறை, கூடுதலாக டிக்கெட் வழங்கும் மையம் ஏற்படுத்தப்படுமா?

Update: 2023-08-18 20:18 GMT

தஞ்சை ரெயில் நிலையத்தில் அமரிபாரத் திட்டத்தின் கீழ் ரூ.23 கோடியில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. இதையடுத்து தஞ்சை ரெயில் நிலையத்தில் குறைந்த வாடகையில் தங்கும் அறை, டிக்கெட் வழங்கும் மையம் கூடுதலாக ஏற்படுத்தப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

தஞ்சை ரெயில் நிலையம்

திருச்சி ரெயில்வே கோட்டத்தில் அதிக வருமானம் வரும் ரெயில் நிலையங்களுள் திருச்சிக்கு அடுத்தபடியாக தஞ்சை விளங்கி வருகிறது. இங்கிருந்தும் பயணிகளும் அதிக அளவில் வெளியூர்களுக்கும், வெளியூர்களில் இருந்து தஞ்சைக்கும் வந்து செல்கிறார்கள். அதிக வருமானம் வந்தாலும் ரெயில் நிலையத்தில் இன்னும் போதுமான வசதிகள் இல்லை.

தஞ்சை ரெயில் நிலையத்தில் 2022-2023-ம் ஆண்டில் மட்டும் ரூ.43.16 கோடி டிக்கெட் மூலம் வருவாய் கிடைத்துள்ளது. 36 லட்சம் பயணிகள் வந்து சென்றுள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசு நாடு முழுவதும் அம்ரிபாரத் திட்டத்தின் கீழ் 508 ரெயில் நிலையங்களை மேம்படுத்த உத்தரவிட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை பிரதமர் நரேந்திரமோடி கடந்த 6-ந்தேதி தொடங்கி வைத்தார்.

ரூ.23 கோடியில் மேம்படுத்தப்படுகிறது

இதில், ரெயில் நிலையங்களில் பயணிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், நுழைவுவாயில்கள் சீரமைப்பு, மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள், மல்டி லெவல் பார்க்கிங் வசதி, கண்காணிப்பு கேமரா, வை பை வசதி, இயற்கைக் காட்சிகள், தோட்டம் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும். இந்த திட்டத்தில் தஞ்சை ரெயில் நிலையமும் அடங்கும். தஞ்சை ரெயில் நிலையத்தில் மட்டும் ரூ.23 கோடி செலவில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தஞ்சை ரெயில்நிலையத்தில் பல்வேறு பணிகள் மேற்கொண்டாலும், குறிப்பாக ரெயில் நிலையத்தில் போதுமான டிக்கெட் வழங்கும் மையங்கள் இல்லை. தற்போது 4 மையங்கள் செயல்பட்டாலும், காலை மற்றும் மாலை நேரங்களில் டிக்கெட் எடுப்பதற்கு அதிக கூட்டம் வரிசையில் நிற்கிறது. இதனால் முன்பதிவு செய்யாமல் டிக்கெட் எடுப்பதற்காக வரும் பயணிகள் சில நேரங்களில் டிக்கெட் எடுக்க முடியாமல் ரெயிலை தவற விடும் நிலை உள்ளது.

தங்கும் அறைகள்

எனவே கூடுதலாக டிக்கெட் வழங்கும் மையங்கள் அமைக்க வேண்டும். மேலும்ரெயில் நிலையத்தில் பின்வாசல் வழியாக வரும் இடத்தில் உள்ளடிக்கெட் வழங்கும் மையம் மூடியே கிடக்கிறது. இதனையும் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். ரெயில் நிலையத்தில் அனைத்து நடைமேடைகளிலும் டிஜிட்டல் பலகை வைக்கவேண்டும். நகரும் படிக்கட்டுகள் 2 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது தொடங்கப்பட்ட போது இயங்கியதோடு சரி. அதன் பின்னர் அதுவும் இயங்காமல் உள்ளது. அதனையும் இயங்க செய்ய வேண்டும்.

தஞ்சை ரெயில் நிலையத்தில் தங்கும் அறைகள் இருந்தன. கொரோனா வடியைுரதன காலக்கட்டத்திற்கு பின்னர் அந்த அறைகள் செயல்படவில்லை. எனவே அதனையும் புதுப்பித்து மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் தங்குவதற்காக குறைந்த வாடகை கட்டணத்தில் தங்கும் அறைகள் உள்ளன. அதாவது பொது கழிவறை, மற்றும் குளியலறையுடன் பெரிய அரங்கில் தடுப்புகள் ஏற்படுத்தி ஒவ்வொருவரும் தங்குவதற்கு வசதியாக படுக்கை, மின்விசிறி உள்ளிட்ட அறைகள் உள்ளன. அந்த அறைகள் காலை 7 மணி முதல், இரவு 7 மணி வரை என 12 மணி நேர அடிப்படையில் வாடகைக்கு விடப்படுகிறது. இது ரெயில் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதே போன்று தஞ்சை ரெயில் நிலையத்திலும் பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் தங்கும் வகையில் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். இந்த வசதிகளும் செய்தால் தஞ்சை ரெயில் நிலையம் மேலும் வருவாய் அதிக அளவில் ஈட்டும் ரெயில் நிலையமாக திகழும் என்பதில் எந்தவித அய்யமும் இல்லை.

கூடுதல் ரெயில்கள் இயக்கப்படுமா?

இது குறித்து ரெயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் வக்கீல் ஜீவக்குமார் கூறுகையில், கொரோனா காலக்கட்டத்தில் தஞ்சை வழியாக இயக்கப்பட்ட பெரும்பாலான ரெயில்கள் நிறுத்தப்பட்டன. தற்போது மீண்டும் அதிக அளவில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்னும் தஞ்சையில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ரெயில்கள் இயக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதே போல் திருச்சியில் இருந்து இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை தஞ்சை வரை நீட்டிக்கவேண்டும். மேலும் தஞ்சை- திருச்சி இடையே மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதால் கூடுதலாக பயணிகள்ரெயில்கள் இயக்க வேண்டும். சென்னை எழும்பூரை போல குறைந்த வாடகையில் தங்கும் அறைகள் ஏற்படுத்த வேண்டும். டிக்கெட் வழங்கும் மையங்கள் கூடுதலாக திறக்கவேண்டும். முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கான காத்திருப்பு அறைகளை மேலும் நவீனப்படுத்த வேண்டும். கழிவறை வசதிகள் கூடுதலாக செய்து தர வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்