ராமஜெயம் கொலையில் மர்மம் விலகுமா? சந்தேக நபர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை தொடங்கியது

ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேக நபர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நேற்று தொடங்கியது. முதல் நாளில் 4 பேரிடம் விசாரணை நடைபெற்றது.

Update: 2023-01-18 23:57 GMT

சென்னை,

தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், தொழில் அதிபருமான ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலையில் நடைபயிற்சி சென்றபோது மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கை 10 ஆண்டுகளுக்கு மேலாக போலீசார் விசாரணை நடத்தியும் கொலையாளிகள் யார்? என்பது பற்றி எந்தவித துப்பும் துலக்கவில்லை. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் வந்தது. போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி புலன் விசாரணையில் இறங்கினர். ராமஜெயத்தை கொலை செய்தவர்கள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவித்தனர்.

உண்மை கண்டறியும் சோதனை

மேலும் இந்த வழக்கு தொடர்பாக பலரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கூலிப்படை கும்பலை சேர்ந்த 12 பேர் சந்தேக நபர்கள் பட்டியலில் வைக்கப்பட்டனர். அவர்களிடம் உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்துவதற்கு திருச்சி மாஜிஸ்திரேட்டிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுமதி பெற்றனர்.

இதைத்தொடர்ந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்தில் நேற்று இந்த சோதனை தொடங்கியது. சந்தேக நபர்கள் பட்டியலில் இடம் பெற்ற கூலிப்படை கும்பலை சேர்ந்த திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ்குமார், சத்யராஜ் ஆகிய 4 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு நேற்று ஆஜராகினர்.

வக்கீல்களுக்கு அனுமதி

அவர்களிடம் டெல்லியில் இருந்து வந்திருந்த மத்திய தடயவியல் துறையை சேர்ந்த மன தத்துவ நிபுணர்கள் 2 பேர் இந்த சோதனையை மேற்கொண்டனர். ராமஜெயம் கொலை தொடர்பாக 15 கேள்விகள் எழுப்பப்பட்டதாக தெரிகிறது. இந்த பரிசோதனை விவரம் அனைத்தும் 'வீடியோ' பதிவு செய்யப்பட்டது.

இந்த விசாரணையின்போது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உடன் இருந்தார். இந்த விசாரணையில் சந்தேக நபர்கள் 4 பேரின் வக்கீல்களும் அனுமதிக்கப்பட்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 7 மணி வரை நடைபெற்றது.

மீதமுள்ள 8 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை அடுத்தடுத்த நாட்களில் நடைபெற உள்ளது. இந்த பரிசோதனை முடிவு அறிக்கையின் அடிப்படையில் இவர்கள் குற்றவாளிகளா? இல்லையா? என்பது தெரிய வரும்.

Tags:    

மேலும் செய்திகள்