பட்டைய கிளப்பும் பறை இசை கலைஞர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்குமா?

பட்டைய கிளப்பும் பறை இசை கலைஞர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2022-12-17 20:20 GMT

தமிழகத்தில் ஆதி காலம் தொட்டு இருந்து வரும் முக்கிய இசைக்கருவி பறை. அதன் மற்றொரு பெயர் தப்பு. கிராமப்புறங்களில் தப்பட்டை என்றும் பேச்சுவழக்கில் கூறுகிறார்கள். இது தோல் இசைக்கருவி. இது கற்காலத்தின் முதல் தகவல் தொடர்பு சாதனமாக இருந்து வந்துள்ளது.

பறை இசை

பண்டைய காலத்தில் வாழ்ந்த தொல்குடி தமிழர்களின் நிலவியல் பாகுபாட்டின் அடிப்படையிலும் 'பறை' பயன்படுத்தப்பட்ட வரலாறு உண்டு. குறிஞ்சிப்பறை, முல்லைப்பறை, மருதப்பறை, நெய்தல் பறை, பாலைப்பறை என ஐந்திணைகளிலும் பறை முழக்கிய செய்திகள் காண கிடைக்கின்றன.

'பறை' என்ற சொல்லே இசைக்கருவியையும், செய்தி அறிவிக்கும் முறையையும் குறித்தது எனத் தொல்காப்பியம் கூறுகிறது. ஒரு மன்னன் எதிர்நாட்டுக்கு சென்று போர் புரியும் முன் அங்குள்ள போர் புரியவியலாத மக்களை வெளியே வர வேண்டாம் என்று அறிவிக்கவும், பெருகிவரும் வெள்ளப்பெருக்கை தடுக்கவும், விவசாயிகளை அழைக்கவும், போர் வீரர்களை அணிதிரட்டவும், வெற்றி-தோல்வியை அறிவிக்கவும், வயல்களில் உழவு வேலை செய்வோருக்கு ஊக்கமளிக்கவும், விதைக்கவும், அறுவடை செய்யவும், காடுகளில் விலங்குகளை விரட்டவும், மன்னரின் செய்திகளை மக்களுக்கு தெரிவிக்கவும், இயற்கை வழிபாட்டில், கூத்துகளில், விழாக்களில், இறப்பில் என்று எங்கும் பறை இசைக்கு சங்க காலங்களில் இருந்து இன்றளவும் முக்கியத்துவம் மங்கவில்லை.

பட்டைய கிளப்பும்

இன்றைய காலக்கட்டத்தில், கிராமப்புற பகுதிகளில் கோவில் விழாக்கள், திருமண விழாக்கள், சீர்வரிசை, இறப்பு சடங்குகள் உள்ளிட்ட பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து நிகழ்வுகளிலும் பறை எனப்படும் தப்பிசை கருவியை அடித்து பறை இசைக்கலைஞர்கள் பட்டைய கிளப்பி வருகின்றனர். தமிழ் சினிமாக்களிலும் பறை இசையின் புகழ் பறைசாற்றப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக டிரம்ஸ், கேரளா செண்டை மேளம் உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகளின் ஆதிக்கம் அதிகரித்து வந்தாலும் தேவூர் பகுதியில் இன்றும் பழமையை மறக்காமல் பறை அடிப்பதை தங்களது வாழ்வாதார தொழிலாக அனைத்து நிகழ்வுகளிலும் பறை அடித்து அசத்தி வருகின்றனர். டிரம்ஸ் இசைக்கலைஞர்கள் போன்று இவர்களும் சீருடை அணிந்து கால மாற்றத்திற்கு ஏற்ப தங்களை உயர்த்தி கொண்டு பறை இசைக்கலையை தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.

பறை அடிக்கும் போது தவில், நாதஸ்வரம், நெடுங்குழல் உள்ளிட்ட துணை இசை கருவிகளுடன் சேலம் மாவட்டம், தேவூர் பகுதியில் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து நிகழ்வுகளிலும் இசைத்து வருகின்றனர்.

பறை இசை கலைஞர்களுக்கு விருது

தமிழரின் பாரம்பரிய மரபு இசை பறையை ஊக்குவிக்க அரசு பறை இசை கலைஞர்களுக்கு பல்வேறு விருதுகள் ஊக்கத்தொகை வழங்கி கவுரவப்படுத்துமா? என்று பறை இசை கலைஞர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்,

இது குறித்து பறை இசைக்கலைஞர்கள் கூறிய கருத்துக்களை காண்போம்.

குணால் (மூலப்பாதை):-

எனது தாத்தா, எனது அப்பா இப்போது நான் என தலைமுறை, தலைமுறையாக பறை இசைப்பதை வாழ்வாதார தொழிலாக செய்து வருகிறோம். சங்க கால தமிழ் மரபு இசை பறை இசையை அழியாமல் அடுத்த தலைமுறை சந்ததியினருக்கு கொண்டு செல்லும் வகையில் அரசு பறை இசை கலைஞர்களுக்கு மற்ற துறைகளை போல் பல்வேறு விருதுகள் ஊக்க தொகைகள் வழங்கி கவுரவப்படுத்த வேண்டும். தற்போது பல்வேறு இசைக்கருவிகள் வரத் தொடங்கி விட்டது. பழமை வாய்ந்த பறை இசை நாட்டுப்புறப் பாடல் மற்றும் சினிமாக்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பறை இசையை அரசு பாதுகாக்க பறை இசை கலைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜேந்திரன்(சென்றாயனூர் காலனி):-

நான் இசைமேல் உள்ள ஆர்வத்தில் பறை இசை பழகி கடந்த 10 ஆண்டுகளாக பறை அடிக்கும் தொழிலை செய்து வருகிறேன். ஒரு சில குறிப்பிட்ட சமூகத்தினர் தான் பறையடிக்க வேண்டும் என்பது எல்லாம் இல்லை. இசை என்பது ஒரு கலை, அதை யாரு வேண்டுமானாலும் முறையாக கற்றுக்கொண்டு பறை இசைக்கலாம். இசை என்பது மனதை கவர்ந்து இழுக்கும் ஒரு கலையாகும். சந்தோசமான நிகழ்ச்சிகளுக்கு ஒரு விதமான இசையும், துக்கமான நிகழ்ச்சிகளுக்கு ஒரு விதமான இசையும், கோவில் விழாக்களுக்கு ஒரு விதமான இசையும் அடித்து ஆட வைப்போம். அனைத்து நிகழ்வுகளுக்கும் இரவு பகல் பாராமல் சென்று பறையடித்து வரும் எங்களின் நிலைமை முன்னேற்றம் இன்றி கேள்விக்குறியாகவே உள்ளது. மற்ற கலைஞர்களுக்கு அரசு விருதுகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கி கவுரவிப்பது போல சிறந்த பறை இசை கலைஞர்களுக்கும் அரசு விருதுகள் வழங்கி கவுரவப்படுத்த வேண்டும். மேலும் நலிவடைந்த, வயது முதிர்ந்த பறை இசைக்கலைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்