கத்தேரி பிரிவு பைபாஸ் சாலையில் மேம்பாலம் அமைக்கப்படுமா?
குமாரபாளையத்தில் அடிக்கடி நடைபெறும் விபத்துக்களை தடுக்க கத்தேரி பிரிவு பைபாஸ் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குமாரபாளையம்
மேம்பாலம் அமைக்க வேண்டும்
சேலம் முதல் கோவை வழியாக கேரள மாநிலம் கொச்சி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை குமாரபாளையம் வழியே செல்கின்றது. இச்சாலை சேலம் முதல் செங்கப்பள்ளி வரை நான்கு வழிச்சாலையாகவும், செங்கப்பள்ளி முதல் கோவை வரை ஆறு வழிச்சாலையாகவும் உள்ளது.
சென்னையில் இருந்து கொச்சி துறைமுகத்திற்கு செல்கின்ற கனரக வாகனங்கள் இந்த சாலை வழியாகத்தான் சென்றாக வேண்டும். தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்ற இந்த முக்கிய வழித்தடத்தில் அமைந்துள்ள பெரும்பாலான நகரங்களுக்கு மேம்பாலங்கள் அமைக்கப்பட்டது. அதன்படி குமாரபாளையத்தில் ஈரோடு, பள்ளிபாளையம் செல்லும் பாதையில் தேசிய நெடுஞ்சாலையின் மேல் மேம்பாலம் அமைக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் பெரும் போராட்டத்திற்கு பின் திருச்செங்கோடு செல்லும் பாதைக்காக கோட்டை மேடு பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
ஆனால் குமாரபாளையத்தில் இருந்து சங்ககிரி, சேலம், சென்னை செல்வதற்கு பயணிகள் கத்தேரி பிரிவு பைபாஸ் ரோட்டை அடைந்து அங்கிருந்து, தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்ல வேண்டும். அதேபோல் சேலத்தில் இருந்து குமாரபாளையம் வருபவர்கள் கத்தேரி பிரிவு பைபாஸில் வலது புறம் திரும்பி நகருக்குள் செல்ல வேண்டும். ஆனால் கத்தேரி பிரிவு பைபாஸ் ரோட்டில் மேம்பாலம் இல்லாததால் போக்குவரத்து நெரிசல்களும், அடிக்கடி வாகன விபத்துகளும், உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. எனவே இதை தடுக்க கத்தேரி பிரிவு பைபாஸ் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
போக்குவரத்து போலீசார்
இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் வக்கீல் தங்கவேல் கூறியதாவது:-
சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் இரவு, பகலாக எந்த நேரமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. உயிரை பணயம் வைத்து தான் ரோட்டை கடக்க வேண்டிய நிலை உள்ளது. அந்த அளவுக்கு அதிவேகமாக வாகன போக்குவரத்து நடைபெறுகிறது.
கடந்த 2001-ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை அமைக்க ஆய்வு செய்தபின், பொதுமக்களுக்கு அறிவிப்பு எதுவும் தெரிவிக்காமல் அதிகாரிகளே சாலை பணியினை மேற்கொண்டனர். இதன் விளைவாக முக்கிய சாலை பிரிவு பகுதியான இங்கு மேம்பாலம் அமைக்கப்படவில்லை. மேம்பாலம் அமைக்கப்படாததால் சாலையை கடக்க முயன்ற பலர் விபத்தில் உயிரிழந்து உள்ளனர். தற்காலிகமாக மின்னல் வேகத்தில் வாகனங்கள் வருவதை தடுக்க போக்குவரத்து போலீசார் அங்கு நியமிக்க வேண்டும்.
போக்குவரத்து நெரிசல்
பெயிண்டர் கனி என்கிற ரவிச்சந்திரன் கூறியதாவது:-
சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டால் இப்பகுதி நகரின் மையப் பகுதியாக விளங்கும். ஏனென்றால் ஜவுளி மற்றும் ஜவுளி சார்ந்த தொழில்கள் மிகுதியாக நடைபெறுகிறது. இங்குள்ள பொதுமக்கள் தங்களது உற்பத்தி பொருட்களை கொண்டு செல்ல இந்த சாலையை தான் பயன்படுத்தியாக வேண்டும். அப்போது போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் செல்வதற்கு பேருதவியாக இருக்கும்.
மேலும் பொதுமக்கள் சாலையை எளிதில் கடக்க முடியும். விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுவதை தடுக்க முடியும். குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டுவரும் 50-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் தாமதமின்றி செல்ல முடியும். நூற்பாலைகளுக்கு தொழிலாளர்களை ஏற்றி செல்கின்ற வாகனங்கள், ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில் நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை ஏற்றி செல்கின்ற வாகனங்கள், சேலம்-கோவை, சேலம்- திருப்பூர், கோவை- பெங்களூரு கோவை- சென்னை செல்லும் பாயிண்ட் டு பாயிண்ட் வகை பயணிகள் பஸ்கள், கேரளாவுக்கு செல்கின்ற பஸ்கள் இந்த இடத்தை விபத்து இல்லாமல் கடந்திட முடியும்.
கல்வி பாதிப்பு
இதுபற்றி தட்டாங்குட்டை ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் நாச்சிமுத்து கூறியதாவது:-
எதிர்மேடு, ஆசிரியர் காலனி, அண்ணா நகர், காந்திநகர், எம்.ஜி.ஆர். நகர், அன்னை சத்யா நகர், தட்டாங்குட்டை, செங்காடு, அருவங்காடு, ஜெயலலிதா நகர் உள்ளிட்ட பல கிராமங்களில் வசிக்கக்கூடிய சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நாள்தோறும் குமாரபாளையம் நகரத்துக்கு பல்வேறு பணிகளுக்காக செல்வதற்கு தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டி உள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளும் நாள்தோறும் இருசக்கர வாகனங்களிலும், கல்லூரி பஸ்களிலும் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டி உள்ளது.
மேலும் எதிர்மேடு, தட்டாங்குட்டை, வேமன்காட்டு வலசு, வீ.மேட்டூர் போன்ற ஊர்களில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் கல்வியை தொடர மேல்நிலைப்பள்ளிகள் கல்லூரிகளுக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டி உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை கருத்தில் கொண்டு பல பெற்றோர் தங்கள் குழந்தைகளை 8-ம் வகுப்புடன் நிறுத்தி விடுகிறார்கள். இதனால் மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.