கூடலூரில் உழவர் சந்தை கை கொடுக்குமா?
கூடலூரில் உழவர் சந்தை கை கொடுக்குமா? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
நாட்டின் முதுகெலும்பு விவசாயம். சேற்றில் விவசாயி காலை வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பது பழமொழி. அத்தியாவசிய தேவைகளில் ஒன்று உணவு.
உழவர் சந்தை
விளைநிலங்களை உழுது, பயிரிட்டு தண்ணீர் பாய்ச்சி, பராமரித்து விவசாயிகள் பாடுபட்டு உண்டாக்கும் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமல் இன்று வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் விவசாயிகள் தாங்களாகவே நேரடியாக பொதுமக்களிடம் விளைபொருட்களை விற்பனை செய்து லாபம் ஈட்டும் வகையில் கடந்த 1999-ம் ஆண்டு தமிழக அரசால் முதன் முறையாக மதுரையில் உழவர் சந்தை திறக்கப்பட்டது. தொடர்ந்து படிப்படியாக மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகள் திறக்கப்பட்டன. இந்த சந்தைகளுக்கு விவசாயிகள் தினமும் நேரடியாக வந்து தங்களது விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
நேரடி விற்பனை
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ், காலிபிளவர் உள்ளிட்ட மலை காய்கறிகள் விளைகிறது. இதனால் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளிலும் உழவர் சந்தைகள் திறக்கப்பட்டது. ஆனால், கூடலூரில் உழவர் சந்தை இல்லாததால் கடந்த 2011-ம் ஆண்டு ரூ.25 லட்சம் செலவில் புதிய பஸ் நிலையம் அருகே உழவர் சந்தை திறக்கப்பட்டது.
மைசூரு-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால் தொடக்க காலத்தில் ஏராளமானோர் உழவர் சந்தைக்கு வந்து நியாயமான விலையில் காய்கறிகள் வாங்கி சென்றனர். மேலும், விவசாயிகளும் தங்களது விளைபொருட்களை கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்து வந்தனர். ஆனால், நாளடைவில் உழவர் சந்தைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்தது. இதனால் போதிய வியாபாரம் இன்றியும், விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமலும் விவசாயிகள் கடைகளை காலி செய்தனர்.
தீர்வு கிடைக்குமா?
பின்னர் வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறையினர், தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறையினர் இணைந்து விவசாயிகளை ஒருங்கிணைத்து மீண்டும் உழவர் சந்தையில் கடைகளை ஒதுக்கி கொடுத்தனர். அப்போது விவசாயிகள் பல்வேறு புகார்களை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். நடைபாதை கடைகள் அதிகரிப்பால், உழவர் சந்தைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
தற்போது உழவர் சந்தையில் முதுமலை உழவர் உற்பத்தியாளர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் என 20 கடைகளில் விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். ஆனால், போதிய வியாபாரம் இல்லாததால் உழவர் சந்தை கை கொடுக்குமா என விவசாயிகள் கவலையுடன் எதிர்பார்த்து உள்ளனர். இதேபோல் நடைபாதை வியாபாரிகளும் மாற்றிடம் ஒதுக்கினால் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என கூறியுள்ளனர். எனவே, உழவர் சந்தை விவசாயிகளுக்கும், நடைபாதை வியாபாரிகளுக்கும் இடையே உள்ள பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள், வியாபாரி தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-
நடைபாதை கடைகளால் பாதிப்பு
முதுமலை உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயி ராஜேஷ்:-
கூடலூர் பகுதியில் விளையக்கூடிய நேந்திரன் வாழை, பாகற்காய், முள்ளங்கி, பயறு உள்பட பல வகை காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டு உழவர் சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இங்கு வெளி மார்க்கெட்டுகளை விட குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது.
இதை அறிந்த மக்கள் மட்டுமே வந்து வாங்கி செல்கின்றனர். நகருக்குள் நடைபாதை கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் உழவர் சந்தைக்கு வருவதை பெரும்பாலான மக்கள் தவிர்த்து விடுகின்றனர். இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க விளைபொருட்களை இடைத்தரர்களிடம் விற்க வேண்டிய நிலை தொடர்கிறது. நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. நடைபாதை கடைகளை அகற்றினால் மட்டுமே உழவர் சந்தையில் வியாபாரம் நடக்கும்.
வீணாகும் நிலை
கூடலூர் அள்ளூர்வயல் விவசாயி ராஜன்:-
அறுவடை செய்து உழவர் சந்தைக்கு கொண்டு வரும் விளைபொருட்களை 2 நாட்களுக்கு மேல் வைக்க முடியாது. வாடிக்கையாளர்கள் வருகை இல்லாததால் வீணாகும் நிலை ஏற்படுகிறது. இதனால் மொத்த வியாபாரிகளிடம் விளைபொருட்களை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
நகருக்குள் நடைபாதை கடைகள் பெருகிவிட்டதால் உழவர் சந்தையில் வியாபாரம் நடைபெறுவது இல்லை. இதனால் எத்தனை நாட்களுக்கு கடையை திறந்தேன், கொள்வார் இல்லை என்ற கதை போல் வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து இருப்பது. நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு முறையிடப்பட்டு உள்ளது. உரிய நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.
விழிப்புணர்வு நடவடிக்கை
பாடந்தொரை விவசாயி ரகுநாதன்:-
நடைபாதை கடைகளால் உழவர் சந்தையில் வியாபாரம் இல்லை என்பது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும். கேரளா மாநிலம் சுல்தான்பத்தேரி, ஊட்டி, குன்னூர் பகுதியில் நடைபாதை வியாபாரிகளுக்கு மாற்றிடம் வழங்கப்பட்டு உள்ளது. இதே போல் கூடலூரிலும் அவர்களுக்கு மாற்றிடம் வழங்க வேண்டும்.
உழவர் சந்தை அருகே உள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலக வளாகம் புதர்கள் சூழ்ந்து உள்ளது. அந்த இடத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கு குறைந்த வாடகையில் இடம் ஒதுக்கலாம். அங்கு வாகனங்கள் நிறுத்துவதற்கான போதிய இட வசதி இருப்பதால் மக்கள் அதிகமாக வர வாய்ப்புள்ளது. உழவர் சந்தை குறித்து கிராம மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. உழவர் சந்தையில் விற்கக்கூடிய பொருட்களின் விலை குறைவாக இருப்பது என தெரிந்தால் இன்னும் அதிகம் பேர் வர வாய்ப்பு உள்ளது. அதற்கான விழிப்புணர்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.