ஆபத்தான நடைபாலம் சீரமைக்கப்படுமா?
திருமருகல் அருகே ஆபத்தான நடைபாலம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
திட்டச்சேரி:
திருமருகல் அருகே ஆபத்தான நடைபாலம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நடைபாலம்
திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி-புதுக்கடை இடையே வீரமுட்டி வடிகால் வாய்க்கால் குறுக்கே கான்கிரீட் நடைபாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் 1996-ம் ஆண்டு ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
இந்த பாலம் வழியாக திருச்செங்காட்டங்குடி, புதுக்கடை, கீழபூதனூர், திருக்கண்ணபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் சென்று வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள், வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள் இந்தப் பாலம் வழியாக திருச்செங்காட்டங்குடி, அண்ணாமண்டபம் வந்து செல்ல வேண்டும்.
தடுப்பு சுவர் இடிந்து சேதம்
இந்த நிலையில் தற்போது இந்த நடைபாலத்தின் ஒரு பகுதியில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. இதனால் இந்த பாலம் வழியாக நடந்து செல்பவர்கள் தடுமாறி வாய்க்கால் விழும் ஆபத்தான நிலை உள்ளது. இந்த இடத்தில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் இப்பாலத்தில் வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இது குறுகிய பலமாக இருப்பதால் அவசர தேவைகளுக்கு இந்த வழியே ஆட்டோ, கார் செல்ல முடியாத நிலை உள்ளது.மேலும் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் உரம், மருந்துகள் மற்றும் தாங்கள் விளைவித்த பொருட்களை உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு எடுத்து செல்ல முடியாத நிலை உள்ளது.
சீரமைக்க வேண்டும்
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிர் பலி ஏற்படுவதற்கு முன்பு தடுப்பு சுவர் இடிந்து விழுந்து ஆபத்தான நிலையில் உள்ள நடைபாலத்தை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.